அமெரிக்க பாராளுமன்றத் கலவரம்; தண்டனையிலிருந்து தப்பினார் ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு வாக்குகளை செனட் சபை பெறத் தவறியுள்ளது.

இதன்மூலம் கடந்த ஜனவரி 6 ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்ற வன்முறையைத் தூண்டியதான குற்றச்சாட்டில் இருந்து ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு 57–43 என பெரும்பான்மை செனட்டர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர். 7 குடியரசு கட்சியினரும் ஆதரவளித்திருந்தனர். எனினும் தேவைப்படும் மூன்றில் இரண்டு வாக்குகளான 67 வாக்குகளை பெற 10 வாக்குகள் குறைவாக இருந்தன.

குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், “இந்த விசாரணை வரலாற்றில் மிகப்பெரிய சூனிய வேட்டை” என்று சாடியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் முகம்கொடுத்த இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானமாக இது இருந்தது.

ஒருவேளை அவர் மீதான குற்றச்சாட்டு நிறைவேற்றப்பட்டிருந்தால், அவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை மீண்டும் முதன்மையாக்குவதற்குத் தேவையான அம்சங்களை எதிர்பார்த்திருக்குமாறு ஆதரவாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்கெடுப்புக்குப் பின், அமெரிக்க கொங்கிரஸ் அவையில் இருக்கும் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் மிட்ச் மெக்கானல், “ட்ரம்ப் தான் பாராளுமன்ற கட்டடத் தாக்குதலுக்குப் பொறுப்பு. அது மிக மிக மோசமானது. ஜனாதிபதி தன் கடமையில் இருந்து தவறிய செயல்” எனக் கூறினார். இவர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 02/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை