'தமிழ் தேசிய பேரவை' எனும் அமைப்பு உருவாக்கம்

தீர்மானம் எடுத்துள்ளதாக சுரேஷ் தெரிவிப்பு

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘தமிழ் தேசியப் பேரவை’ ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்றது. இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்ட அதேவேளை, கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொள்ளவில்லை.

கூட்டம் தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய 10 கட்சிகள், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முதலாவது வரைபு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பல விடயங்களை ஆராய்ந்துள்ளோம். இந்தக் கூட்டத்தில், முக்கியமாக இரண்டு விடயங்கள் பேசப்பட்டன. இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி வவுனியாவில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகளும், வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதின முதல்வர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடவுள்ளோம்.

அதில், முக்கியமாக தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கைகள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.வின் முதலாவது வரைபில் சரியான முறையில் பிரதிபலிக்கப்படவில்லை. அது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற விடயமாக சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆகவே, வரைவு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சரியான தீர்வினைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். அந்த விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய பல கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார்கள்.

ஆனால், அந்த முதலாவது வரைபில் அவை உள்ளடக்கப்படவில்லை. எனவே, வரும் 26ஆம் திகதி அடுத்தக்கட்டமாக இதற்கு என்ன செய்வது என்பது பற்றி ஆராய்வதற்காக ஒன்றுகூடிப் பேசவுள்ளோம்.அடுத்தக் கட்டமாக தற்போது நாங்கள் 10 கட்சிகள் கூடி பேசிக் கொண்டிருக்கின்றோம். தமிழர் தரப்பில் இருக்கக் கூடிய ஏனைய கட்சிகள் கூட இணையலாம். ஆகவே, வரும் 28ஆம் திகதி, ‘தமிழ் தேசியப் பேரவை’ உருவாக்கப்படுவதுடன், அந்தப் பேரவையானது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டக்கூடிய சாத்தியப்பாடான முடிவுகளை எடுப்பதற்காகச் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Mon, 02/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை