ஐ.நா மனித உரிமை பேரவை; அமைச்சர் தினேஷ் குணவர்தன உரை

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 46ஆவது அமர்வு நிகழ்வுகள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் முதல் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்றைய தினம் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன காணொளி தொழில்நுட்பம் ஊடாக மாநாட்டில் உரையாற்றியுள்ளார்.

இலங்கை நேரப்படி நேற்று இரவு 8. 52மணியளவில் அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்படி அமர்வில் உரையாற்றியுள்ளதுடன் இலங்கையின் நிலைப்பாட்டை அவர் அதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

மனித உரிமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அதற்கான பதிலை அனுப்பி வைத்துள்ள நிலையில் அது தொடர்பில் நேற்றைய தினம் அமைச்சர் தினேஷ் குணவர்தன விரிவான தெளிவுபடுத்தலை தமது உரையின் மூலம் வழங்கியுள்ளார்.

அதேவேளை இன்றைய தினம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பெச்சலே தமது வருடாந்த அறிக்கையினை மேற்படி மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

மேற்படி ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் 130நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் சம்பந்தமாக கருத்துக்களை முன் வைக்கவுள்ளனர்.

ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, மெசிடோனியா மலாவி உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை இம்முறை மாநாட்டில் முன்வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 02/24/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை