ஈரான் அணு உடன்படிக்கை: பேச்சில் இணைய அமெ. இணக்கம்

முக்கியம் வாய்ந்த அணு உடன்படிக்கையை மீளாய்வு செய்யும் ஈரான் மற்றும் உலக வல்லரசு நாடுகளின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா இணங்கியுள்ளது.

2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி பொரு ளாதாரத் தடைகளை தளர்த்துவதற்காக அணு செயற்பாடுகளை மட்டுப்படுத்த ஈரான் இணங்கியது.

எனினும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த உடன்படிக்கையில் இருந்து 2018 ஆம் ஆண்டு விலகிக் கொண்டதால், ஈரான் தனது கடப்பாட்டில் இருந்து விலகியது.

ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் மீண்டும் இந்த உடன்படிக்கையில் இணைவது குறித்து அமெரிக்கா தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உடன்படிக்கை தொடர்பில் ஈரான் உடன் மீண்டும் ஈடுபட பைடன் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை அமெரிக்கா ஏற்றது என்று இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த இராஜதந்திரியான என்ரிக் மோரா, இந்த உடன்படிக்கையின் தீர்க்கமான தருணமாக இது உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்திருக்கும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் இன்னும் உத்தியோகபூர்வமாக பதிலளிக்கவில்லை. எனினும் அமெரிக்காவின் தடைகள் நீக்கப்படும்போதே இந்த உடன்படிக்கையுடன் ஈரான் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முஹமது ஜவாத் சாரிப் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தடைகளை நீக்காவிட்டால் ஒருசில நாட்களுக்குள் தமது அணு சக்தி தளங்களில் சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு தடை விதிப்பதாக பைடன் நிர்வாகத்தின் மீது ஈரான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

தமது அணு செயற்பாடு அமைதியான நோக்கத்தைக் கொண்டது என்று ஈரான் கூறுகின்றபோதும், அது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் சேமிப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் மின்சக்திக்கு பயன்படுத்த முடியும் என்றாலும் அதனால் அணு ஆயுதமும் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 02/20/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை