அரசின் பாரிய வேலைத்திட்டங்கள் பற்றி மக்களுக்கு விளக்கம்

தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையமொன்று உருவாக்கப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.   ஊடக அமைச்சின் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (17) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை செயற்பட்ட தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்திற்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக வாய்ப்பு கிடைத்ததாகவும் அமைச்சர் கூறினார். எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் தடுப்பூசியை வழங்குவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் கொவிட்-19 காரணத்தினால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, ஆடை உற்பத்தி போன்ற துறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடைபெறுகின்றன.

பொதுமக்களுக்கும், அரச நிர்வாகத்திற்கும் இடையிலான தொடர்பை உயர்நிலையில் பேணும் நோக்குடன் இந்த மத்திய நிலையம் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்தி பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க அனைத்து ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இந்த நிலையம் உதவுவதாகவும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஜகத் பி விஜேவீர தெரிவித்தார். அத்துடன் தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக மிலிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

Thu, 02/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை