கொரோனா சடலங்கள் எரிப்பு; பிரதமரின் அறிவித்தலுக்கமைய வர்த்தமானியை வெளியிட நடவடிக்கைகளை எடுங்கள்

- எஸ்.எம். மரிக்கார் எம்.பி. வேண்டுகோள்

கோவிட் 19 காரணமாக மரணிப்பவர்களை புதைக்கும் விவகாரத்தை மதப் பிரச்சினையாக பார்க்காமல் தேசியப் பிரச்சினையாக பார்த்து பிரதமர் தெரிவித்ததன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கையாக வர்த்தமானியை வெளியிட அனுமதி வழங்க நடவடிக்கை எடுங்களென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்ததாவது .

பிரஜைகளின் அடிப்படை உரிமைகள், ஜனநாயகம் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பாதுகாப்பது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்கு இடம்கொடுப்பது முக்கியமான விடயமாகும்.உலக சுகாதார ஸ்தாபன விதிமுறைகளுக்கு மாறாக இலங்கை அரசாங்கம் நீண்ட நாட்களாக புதைப்பதற்குரிய அனுமதியை மறுத்து வந்தது.இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாங்கள் கூட்டாக இதற்காகப் போராடினோம்.முதுகெலும்பு உள்ளவர்கள் போன்று தொடராக இந்த விஞ்ஞான ரீதியான முடிவிற்காக குரல் கொடுத்தோம்.இது பெரிய விடயமல்ல.தற்போதும் உலகம் பின்பற்றும் வழிமுறைக்கு இந்த அரசாங்கம் அனுமதியளிப்பது தான் இதிலுள்ள விடயம்.

நேற்று காலை நான் பாராளுமன்ற ஹென்சார்ட் பிரிவைத் தொடர்பு கொண்டு திருத்தத்திற்குட்படுத்தாத விதமாக நேற்றைய விடயத்தை பதிவு செய்யுமாறு வேண்டிக் கொண்டேன்.ஹென்சார்ட் பதிவுகளை யாராலும் மாற்ற முடியாது.எனவே இதை ஒர் மதப் பிரச்சினையாக பார்க்காமல் தேசியப் பிரச்சினையாக பார்த்து பிரதமர் தெரிவித்த பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கையாக வர்த்தமானியை வெளியிட்டு இதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுங்கள்.

Fri, 02/12/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை