நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரில் முடக்கநிலை அமுல்

உள்ளூரில் மூன்று கொரோனா தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரான ஒக்லாந்தில் முடக்கநிலையை அமுல்படுத்த அந்நாட்டு பிரதமர் ஜெசின்டா ஆர்டன் உத்தரவிட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்கு இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டிருப்பதோடு மக்களை தமது வீடுகளில் இருக்கும்படி கோரப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் நாடு “கடுமையானதும் விரைவானதுமான” நடவடிக்கைக்குச் செல்வதாக ஆர்டன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றை கையாள்வதில் பாராட்டைப் பெற்ற நியூசிலாந்தில், கடந்த சில மாதங்களில் சமூகப் பரவல் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இந்த நோய்த் தொற்றின் ஆரம்பத்திலேயே கிட்டத்தட்ட வெளிநாட்டினர் அனைவருக்கும் நாட்டு எல்லைகளை நியூசிலாந்து மூடியது. ஐந்து மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நியூசிலாந்தில் 2,300 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஒக்லாந்தின் 1.7 மில்லியன் மக்கள் வீடுகளில் இருப்பதற்கு கோரப்பட்டிருப்பதோடு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மற்றும் வேலைகளுக்கு மாத்திரமே வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Mon, 02/15/2021 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை