கண்ணாடி, பிளாஸ்டிக்கில் கொரோனா வைரஸ் நீண்ட நாள் வாழும்

ஆய்வில் கண்டுபிடிப்பு

பேப்பர், துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் இரும்பு மேற்பரப்பில் 7 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. அந்தவகையில் பல்வேறு பொருட்களில் இந்த வைரசின் ஆயுட்காலம் குறித்து மும்பை ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக பேப்பர், துணி போன்ற நுண்ணிய மேற்பரப்புகளிலும், கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற கடினமான மேற்பரப்புகளிலும் வைரசின் ஆயுட்காலம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் சுவாச நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் அடங்கிய நீர்த்துளிகள் வைரஸ் தாங்கிகளாகவும், தொற்று பரப்பும் சாதனங்களாகவும் இருக்கின்றன. இந்த நீர்த்துளிகள் பேப்பர், துணி போன்றவற்றில் பட்டவுடன் விரைவில் உலர்ந்து விடுகின்றன. இதனால் அதில் உள்ள வைரசின் ஆயுட்காலமும் குறைவாகவே இருக்கிறது. அதேநேரம் கண்ணாடி, பிளாஸ்டிக், இரும்பு போன்ற பொருட்களில் நீர்த்துளி நீண்ட நேரம் உலராமல் இருப்பது போலவே, வைரசின் ஆயுளும் நீளமாகவே இருக்கிறது. அந்தவகையில் பேப்பர் மற்றும் துணியில் முறையே 3 மணி நேரம் மற்றும் 2 நாட்கள் மட்டுமே வைரஸ் உயிர்வாழ்கிறது. ஆனால் கண்ணாடியில் 4 நாட்கள் வரையும், பிளாஸ்டிக் மற்றும் இரும்பு மேற்பரப்பில் 7 நாட்கள் வரையும் வைரஸ் உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் அலுவலகங்கள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் கண்ணாடி, இரும்பு, பிளாஸ்டிக், மரத்தினால் ஆன பொருட்களை துணியால் மூடி வைக்குமாறு ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் அச்சுறுத்தல் குறையும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Wed, 02/17/2021 - 16:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை