நடுவானில் செயலிழந்த விமானம் தரையிறக்கம்
சிதைவுகள் வீடுகளில் விழுந்தன
அமெரிக்காவின் டென்வர் பகுதியில் யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் சிதைவுகள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்தன.
பாதிப்புக்குள்ளான விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் விமானத்தில் இருந்த 241 பேருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. போயிங் 777–200 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தின் ஓர் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானத்தின் ஒரு பகுதியில் தீ மூண்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் இருந்து பாரிய வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டதாக அதில் பயணித்தவர்கள் குறிப்பிட்டனர்.
விமானம் மிக தாழ்வாகப் பறந்ததாக அவ்வட்டாரக் குடியிருப்பாளர்கள் கூறினர். விமானத்தின் சிதைவுகள் வீடருகில் விழுந்தன என்று அவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு யுனைடட் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் ஹோனலுலு நகர விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் எஞ்ஜீன் செயலிழந்தது. அப்போதும், விமானிகள் திறம்பட செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர் என்பது நினைவு கூறத்தக்கது.
from tkn
Post a Comment