மியன்மாரில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சியை நிராகரித்தும் அந்நாட்டு அரசியல் தலைவி ஆங் சான் சூச்சியை விடுதலை செய்யக்கோரியும் மிகப்பெரிய நகரான யங்கோனில் இரண்டாவது நாளாக நேற்றும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் நிறமான சிவப்பு நிற பலூன்களை ஏந்தியபடி “எமக்கு இராணுவ சர்வாதிகாரம் தேவையில்லை! ஜனநாயகமே தேவை!” என்று கோசமெழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் செயன்றனர்.

பெப்ரவரி 1ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான அடையாளமாக மாறியிருக்கும் மூன்று விரல்களைக் காட்டும் அடையாளத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் காண்பித்தனர். வாகனத்தை செலுத்தியவர்கள் அதன் ஹோர்னை ஒலிக்கச் செய்ததோடு அதில் இருந்த பயணிகள் ஆங் சான் சூச்சியின் புகைப்படங்களையும் சுமந்திருந்தனர்.

“ஜனநாயகத்தை பெறும் வரை நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம். இராணுவ சர்வாதிகாரம் ஒழிக” என்று 37 வயது ஆர்ப்பாட்டக்காரரான மியோ வின் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின்போது கைது செய்யப்பட்ட சூச்சி எங்கே உள்ளார் என்பது இன்னும் தெரியாதுள்ளது.

மெளலாமின் மற்றும் மண்டலாய் ஆகிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

மியன்மாரில் இணையதளங்கள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் முடக்கப்பட்டபோதும் ஆர்ப்பாட்டங்களின் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் போடப்பட்டுள்ளன.

மக்கள் ஒன்றுதிரள்வதை தடுக்க பேஸ்புக், ட்வட்டர் மற்றும் இன்ஸ்டர்கிராம் சமூகதளங்களை தடுத்திருக்கும் இராணுவம் தொலைபேசி சேவைகளுக்கும் தடங்கலை கொண்டுவந்துள்ளது.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் அங்கு 160க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக மியன்மாருக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தோமஸ் அன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

“சிவில் எதிர்ப்பு செயற்பாடுகளை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஜெனரல்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து இணைய இணைப்புகளையும் துண்டிப்பதன் மூலம் அதனை வெளியுலகுக்கு தெரியாமல் செய்ய முயன்று வருகின்றனர்” என்று அன்ட்ரூஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மியன்மாரில் சிவில் ஒத்திழையாமை போராட்டம் வலுத்து வருகிறது. மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களும் தமது பணியை தொடர்வதை மறுத்து வருகின்றனர். ஒவ்வொரு இரவும் மக்கள் வீதிகளில் இறங்கி வீட்டு சமையல் பாத்திரங்களில் ஒலி எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக சர்வதேச அளவிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மியன்மார் மீதான தடைகளை மீண்டும் கொண்டுவருவது பற்றி அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Mon, 02/08/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை