இராணுவ சதிப்புரட்சியை எதிர்த்து மியன்மாரில் தொடர்ந்து பேரணி

பொலிஸார் கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீச்சியடிப்பு

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் நேற்று தேசிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு தலைநகர் நெப்பிடோவில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீச்சியடித்து வருகின்றனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த இராணுவ சதிப்புரட்சியின்போது மியன்மார் ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூச்சி மற்றும் மூத்த உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதோடு சிவில் ஒத்துழையாமை போராட்டங்களும் வலுத்து வருகின்றன.

ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆங் சான் சூச்சியை விடுதலை செய்யும்படியும் நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை கொண்டுவரும்படியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.

மியன்மாரில் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலத்தில் பதிவான மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்று அடுத்த தினத்திலேயே மக்கள் மீண்டும் வீதிகளில் திரண்டனர்.

ஆளும் கட்சி அமோக வெற்றியீட்டிய தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக ஆதாரமின்றி குற்றம்சாட்டியே இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

நாட்டில் ஓர் ஆண்டு காலத்திற்கு அவசர நிலையை இராணுவம் பிரகடனம் செய்தது.

இந்நிலையில் தலைநகர் தவிர, மண்டலாய் மற்றும் யங்கோன் போன்ற நகரங்களிலும் பெரும் எண்ணிக்கையான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று பேரணி நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆசிரியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரச ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். யங்கோனின் மையப் பகுதியான சுலே பகோடாவை நோக்கி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணியாகச் சென்றனர்.

தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீச்சடிக்கப்பட்டபோது சிலர் கீழே விழுந்து காயமடைந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

Tue, 02/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை