யெமன் போருக்கான ஆதரவை நிறுத்திக்கொண்டது அமெரிக்கா

யெமனில் தனது கூட்டணி நடத்தும் போருக்கு ஆதரவு அளிப்பதை கைவிட அமெரிக்கா தீர்மானித்துள்ளது. ஆறு ஆண்டுகளாக நீடிக்கும் இந்தக் கொடிய போரில் 110,000 பேர் வரை உயிரிழந்திருப்பதாக நம்பப்படுகிறது.

“யெமன் போர் நிறுத்தப்பட வேண்டும்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வெளிநாட்டுக் கொள்கை பற்றிய முதல் உரையில் தெரிவித்தார்.

யெமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவூதி அரேபியா தலைமையில் கூட்டணி ஒன்று நடத்தும் இந்தப் போருக்கு அமெரிக்காவின் முந்தைய இரு ஜனாதிபதிகளும் ஆதரவை வெளியிட்டனர்.

இந்த மோதலினால் யெமனில் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியில் தள்ளப்பட்டுள்ளனர்.

பலவீனமான யெமன் அரசுக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2014 ஆம் ஆண்டே மோதல் வெடித்தது. ஓர் ஆண்டுக்கு பின்னர் சவூதி மற்றும் மேலும் எட்டு அரபு நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சின் ஆதரவுடன் இந்தப் போரில் தலையிட்டு வான் தாக்குதல்களை ஆரம்பித்ததை அடுத்து நிலைமை மோசமடைந்தது. இந்நிலையில் வெளிநாட்டுக் கொள்கை பற்றி பைடன் நிலைப்பாட்டில் மேலும் பல முக்கிய விடயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்கா ஏற்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதோடு, ஜெர்மனியில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ்பெறும் முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இரண்டாவது உலகப் போர் தொடக்கம் ஜெர்மனியில் அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறிய டொனால்ட் டிரம்பின் பல முடிவுகளில் மாற்றம் கொண்டுவருவதாக பைடனின் கொள்கைகள் அமைந்துள்ளன.

Sat, 02/06/2021 - 21:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை