செய்திகளுக்கு பேஸ்புக், கூகுள் கட்டணம் செலுத்த புதிய சட்டம்

பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது தளங்களில் உள்ள செய்தி உள்ளடக்கங்களுக்காக கட்டணம் செலுத்த வேண்டிய உலகின் முதலாவது சட்டம் ஒன்றை அவுஸ்திரேலியா நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டத்தை அமெரிக்காவின் இந்த தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தன.

இந்த சர்ச்சை காரணமாக பேஸ்புக் சமூகதளம் அனைத்து செய்தி உள்ளடக்கங்களையும் அவுஸ்திரேலியர்களுக்கு கடந்த வாரம் முடக்கி இருந்தது. எனினும் அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அந்த நடவடிக்கையை திரும்பப் பெற்றுக்கொண்டது.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு பொருந்தாது என்றே சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

'நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்' என்ற இந்தச் சட்டம், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் செய்தி ஊடகங்களுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்கும் என்று அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் நடத்திய ஒரு விசாரணையில், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (பேஸ்புக் மற்றும் கூகுள்) ஊடகத் துறையின் பங்கு மற்றும் லாபங்களில், ஒரு பெரும் பங்கை சேகரித்துள்ளன என்று தெரியவந்தது.

இதன்படி கூகுள், பேஸ்புக் போன்ற தளங்கள் அவை வெளியிட விரும்பும் செய்திப் பதிவுகளுக்கு, செய்தி நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் இடையே கட்டணம் குறித்த பேச்சு தோல்வியுற்றால், அவுஸ்திரேலிய அரசாங்கம் அதில் தலையிட்டு கட்டணங்களை நிர்ணயிக்கும்.

கூகுள் நிறுவனம் அவுஸ்திரேலிய ஊடக நிறுவனம் ஒன்றோடு அதுகுறித்த உடன்பாட்டை எட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடன்பாட்டின் மதிப்பு பல மில்லியன் டொலர் என்றும் கூறப்படுகிறது. இந்த இணைய யுகத்தில் தங்கள் இலாபத்தை இழந்த செய்தி நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம் உதவுவதாக இருக்கும் என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

 

Fri, 02/26/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை