தமிழகத்திலுள்ள இலங்கையரை அழைத்துவர அரசு நடவடிக்கை

- சார்ள்ஸ் MPயின் கோரிக்கைக்கு சாதக நிலை
- வெளிநாட்டமைச்சின் செயலாளர் கொலம்பகே தெரிவிப்பு

தமிழ் நாட்டில் உள்ள முகாம்களில் இருக்கும் 50,000ற்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்களில் கணிசமானவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் கடந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, புகலிடம் கோரியவர்களுக்காக இந்தியாவில் பல முகாம்கள் இருப்பதாகவும் தமிழ் நாட்டில் உள்ள முகாம்களில் 50,000ற்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனைவிட முகாம்களுக்கு வெளியேயும் பலர் இருப்பதுடன், கணிசமானவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முகாம்களில் உள்ள அகதிகளுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகள், கல்வி, அடிப்படைத் தேவைகள் மற்றும் நலன்புரி என்பன வழங்கப்படுவதுடன், சென்னையில் உள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகரால் இவை கண்காணிக்கப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. கொவிட்-19 சூழ்நிலைக்கு மத்தியிலும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு முன்னுரிமை அடிப்படையில் செயற்படுகிறது. அமைச்சின் இந்த முயற்சிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நன்றி தெரிவித்தார்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் விவாதங்கள் இருந்தாலும் சர்வதேச ரீதியில் நாட்டை பிரதிநிதித்துவம் செய்யும்போது அனைவரும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

உள்நாட்டில் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டாலும் சர்வதேச தளங்களில் எமது அயல் நாடான இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஒரே குரலிலேயே தமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச ரீதியில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும்போது அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடுவார்கள் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய ஸ்பெயின் மற்றும் ரெமேனியா ஆகிய நாடுகளில் தூதரகங்களை அமைப்பதற்கு அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இங்கு அறிவித்தார்.

மடகஸ்காரில் தூதரக அலுவலகமொன்றை அமைப்பதற்கும், லீக்கின்ஸ்டைன் நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் இதனால் உள்நாட்டு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக் குறித்த விடயத்தின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு வினப்பட்டது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் விசேட கலந்துரையாடல்கள் தொடர்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இராஜங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி.சில்வா, டிலான் பெரேரா, கலாநிதி சுரேன் ராகவன், சந்திம வீரக்கொடி, காமினி வலேபொட, யதாமினி குணவர்தன, சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன், டயானா கமகே, சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Wed, 02/17/2021 - 17:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை