மாணவர்களின் புள்ளி அடிப்படையிலேயே பிரபல பாடசாலைகளில் இணைப்பு

முறையற்ற விதத்தில் எதுவும் இடம்பெறவில்லை

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள வெளியிட்டிருக்கும் வெட்டுப்புள்ளி, முறையற்ற விதத்தில் அதிகரிக்கப்படவில்லை. மாணவர்கள் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையிலேயே வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளதென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் 27/ 2 இன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள வெளியிட்டிருக்கும் வெட்டுப்புள்ளி முறையற்ற முறையில் அதிகரிக்கப்படவில்லை. மாணவர்கள் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையிலேயே வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்படுகின்றது. மாணவர்கள் குறைந்த புள்ளிகளை பெற்றுக்கொண்டிருந்தால் வெட்டுப்புள்ளி குறைவடையும். இந்த முறை மாணவர்கள் அதிகமானவர்கள் அதிகூடிய புள்ளிகளை பெற்றிருக்கின்றனர்.

அதனால் பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி அதிகரிப்பை யாரும் திட்டமிட்டு செய்வதில்லை. இந்தமுறை அதிகமான மாணவர்கள் கொழும்பில் பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அந்த பாடசாலைகளிலிருக்கும் வெற்றிடங்களின் அடிப்படையைக் கொண்டே அந்த பாடசாலைகளுக்கு வெட்டுப்புள்ளி வழங்கப்படுகின்றது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் விரும்பும் 10 பாடசாலைகளை தெரிவு செய்துகொள்ள முடியும். அதன் ஒழுங்குக்கமையவே மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்திருக்கும் பாடசாலையிலிருக்கும் வெற்றிடத்துக்கமைய மாணவர்களை இணைத்துக்கொள்ள முடியும். பரீட்சையில் 200க்கு 200 புள்ளிகளை 10 மாணவர்கள் பெற்றிருக்கின்றனர். அதேபோன்று 199 புள்ளிகளை 16 பேர் பெற்றிருக்கின்றார்கள். மாணவர்களின் அதி திறமையை நாங்கள் பாராட்ட வேண்டும். பிரபல பாடசாலைகளுக்கு இடைநடுவில் அரசியல்வாதிகளின் தலையீடுகளால் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லை.

அவ்வாறு இணைத்துக் கொள்வதால்தான் அந்த பாடசாலைகளில் வெற்றிடம் குறைவாக இருப்பதற்கு காரணமென தெரிவிக்கப்படுவதில் எந்த அடிப்படையுமில்லை. மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளும் வீதம் கடந்த காலங்களில் போன்றே இந்த முறையும் இடம்பெறுகின்றது. அதில் எந்த குறைப்பும் இடம்பெறவில்லை என்றார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை