மியன்மார் சதிப்புரட்சி: பாதுகாப்பு சபை கண்டன தீர்மானத்தை தடுத்தது சீனா

மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சியை கண்டிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானத்தை சீனா தடுத்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சி மற்றும் நூற்றுக்கணக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இராணுவம் கடந்த திங்கட்கிழமை ஆட்சியை கைப்பற்றியது.

இந்த சதிப்புரட்சித் தலைவர்கள் அமைச்சரவைக்கு மேலான உச்ச கௌன்சில் ஒன்றை நிறுவியுள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய நகரான யாங்கோனில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிர்ப்பு மற்றும் ஒத்துழையாமை போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபை கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோதும், சீனா ஆதரவு அளிக்காததால் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட முடியாமல் போனது.

பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றிருக்கும் சீனா, வீட்டோ அதிகாரத்தை கொண்டிருப்பதால் கூட்டு அறிக்கை ஒன்றுக்கு அதன் ஆதரவது அவசிமாக உள்ளது.

பாதுகாப்புச் சபை கூட்டத்தின் ஆரம்பத்தில் மின்மாருக்கான ஐ.நா சிறப்புத் தூதுவர் கிறிஸ்டின் ஸ்கெரனர், இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை கண்டித்துப் பேசினார். கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூச்சியின் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றதை இராணுவம் ஏற்க மறுத்த நிலையிலேயே இந்த இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது.

“அண்மைய தேர்தல் முடிவில் சூச்சியின் கட்சிக்கு பெருவெற்றி கிடைத்திருப்பது தெளிவான ஒன்று” என்று ஸ்கெரனர் தெரிவித்தார்.

இதேவேளை, மியன்மார் இராணுவம் நாட்டை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை அமெரிக்கா அதிகாரபூர்வமாக ஆட்சிக்கவிழ்ப்பு என்று அறிவித்துள்ளது.

மியன்மாருக்கான வெளிநாட்டு உதவியைப் பரிசீலனை செய்வதோடு அந்நாட்டு இராணுவத் தலைவர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியது.

வலுக்கட்டாயமாக நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இராணுவம், மீண்டும் அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கவில்லை என்றால், புதிய தடைகளை விதிக்கத் தயங்கப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

அமெரிக்கச் சட்டப்படி அமெரிக்கா, மியன்மார் அரசாங்கத்துக்கு இப்போது உதவிகளை நேரடியாக வழங்கமுடியாது. அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள் மூலமாக 2012ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா மியன்மாருக்குச் சுமார் ஒன்றரை பில்லியன் டொலர் கொடுத்துள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஜனநாயக முறைக்கு மாறுவதற்குமான திட்டங்களுக்கு அந்த நிதி உதவியது.

ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக நம்ப ப்படும் தலைவர்களுடன் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றும் அமெரிக்கா குறிப்பிட்டது.

Thu, 02/04/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை