தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு பிரச்சினை

1000 ரூபா குறித்து முக்கிய பேச்சு இன்று

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தையொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தவித இறுதித் தீர்மானமும் இன்றி முடிவுற்றுள்ள நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் பெறுவதாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை, இன்றைய பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படாதவிடத்து ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொள்வதற்கான போராட்டம் மிக பலமானதாக தொடரும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி இ.தொ.காவின் ஏற்பாட்டில் மலையகம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அது முதலாளிமார் சம்மேளனத்திற்கு தோட்டத் தொழிலாளர்களின் ஒற்றுமை விடுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது என இ.தொ.கா வின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமை கிடையாது என சிந்தித்தே முதலாளிமார் சம்மேளனம் தமது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக உள்ளது. அடையாள வேலை நிறுத்தம் தொழிலாளர்களின் ஒற்றுமையை உறுதி செய்துள்ளது என்றும்

ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சம்பள நிர்ணய சபை மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டு எப்போது சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற தீர்மானமும் வெளியிடப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவின் தலைமையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்தன.

அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா என தொழிற்சங்கங்களினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் அதனை நிராகரித்து வருகின்றது.

அந்த நிலையில் சம்பள நிர்ணய சபையின் ஊடாக அதற்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில் அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோரின் தலையீட்டோடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கிணங்க இன்றைய தினம் நடைபெறும் பேச்சுவார்த்தை மூலம் இறுதி தீர்வொன்றுக்கு வரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அது தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மற்றுமொரு தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவிக்கையில்;

கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாகவோ சம்பள நிர்ணய சபை ஊடாகவோ அல்லது அரசாங்கத்தின் நேரடி தலையீட்டுடனோ எந்த வழியானாலும் சரி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். வேறு ஏதாவது கொடுப்பனவுகள் அதனோடு இணைக்கப்பட்டு ஆயிரம் ரூபா வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா என்பதே தோட்டத் தொழிலாளர்களதும் தொழிற்சங்கங்களினதும் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பெரும் இழுபறி நிலையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் இன்றைய பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

இன்றைய பேச்சு வார்த்தையில் சாதகமான தீர்வு எட்டப்படாவிட்டால் மலையகம் தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தொழிலாளர்கள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 02/08/2021 - 06:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை