கிராமத்தைப் போலவே கிராம வாழ்க்கையும் அழகாக இருக்க வேண்டும்

- "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

“கிராமம் அழகானது. அது போலவே கிராம வாழ்க்கையும் அழகாக இருக்க வேண்டும் ”என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. கிராமவாசிகள்தான் இதுவரை கிராமச் சூழலைப் பாதுகாத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நமது மூதாதையர்களின் காலத்திலிருந்து பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய நடவடிக்கைகளை சூழலுக்கு தீங்கு விளைவிப்பவையாக நான் காணவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள உடுதும்பர பிரதேச செயலக பிரிவிலுள்ள மீமுரே கனிஷ்ட வித்தியாலயத்தில் (13) நடைபெற்ற 'கிராமத்துடன் உரையாடல்' 10 ஆவது நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக கைகாவல கனிஷ்ட வித்தியாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் சுமுகமாக கலந்துரையாடி, பாடசாலையின் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

கைகாவல கனிஷ்ட வித்தியாலயத்திற்கு மொபிடெல் நிறுவனம் நன்கொடை அளித்த ஸ்மார்ட் வகுப்பறை, மீமூரே ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கிய மடிக்கணனி, அதிவேக இணைய வசதிகள் மற்றும் டயலொக் நிறுவனம் வழங்கிய தொலைக்காட்சி மற்றும் இணைப்பு ஆகியவற்றை ஜனாதிபதி அதிபரிடம் கையளித்தார்.

மீமூரே- உடுதும்பர வீதியில் இலங்கை போக்குவரத்து சபையினால் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ் வண்டியின் முதலாவது பயணமும் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற்றது.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை மற்றும் கேகாலை மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

மீமுரே கிராமம் உலக மரபுரிமையான பாதுகாக்கப்பட்ட நக்கீல்ஸ் வனப்பகுதியின் இதயமாகவும் கருதப்படுகிறது. கரம்பகெட்டிய, கும்புக்கொல்ல, புஸ்ஸேஎல, கைகாவல மற்றும் மீமுரே கிராம சேவகர் பிரிவுகள் உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவையாகும்.

வீதிகள் அபிவிருத்தி செய்யப்படாதிருப்பதும், விவசாய நிலங்களின் தெளிவான உரிமையில்லாதிருப்பதும் தாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் என்று மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

கைகாவல மத்திய மருந்தகத்திற்கு மருத்துவரொருவரை நியமிக்கவும், அம்புலன்ஸ் வண்டியொன்றை வழங்கவும், உடுதும்பர மருத்துவமனையில் மருத்துவர் வெற்றிடங்களை நிரப்பவும், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இப்பகுதியில் ஏலக்காய் செய்கை பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், இந்த விடயத்தை ஆராய்ந்து முறையான நடவடிக்கை எடுக்க ஒரு குழுவை நியமிக்கும் பொறுப்பு விவசாய அமைச்சரிடம் வழங்கப்பட்டது. மிளகு விளைச்சல் குறைவடைந்திருப்பது தொடர்பில் ஆராயவும் முடிவு செய்யப்பட்டது.

இப்பகுதியில் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை வழங்கவும் மின்சார வேலியை புனரமைத்து செயல்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டார்.

கிராமங்களில் கால்வாய்களை புனரமைத்தல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இப்பகுதியின் மற்ற இரண்டு அடிப்படை தேவைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு மற்றும் இணைய வசதிகளை மேம்படுத்துவதை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஆளுநர் லலித் யு. கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உதய சமிந்த கிரிந்திகொட, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மவாட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் இந்த 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Mon, 02/15/2021 - 16:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை