மியன்மாரில் தொடரும் ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே வீதிகளில் இராணுவத்தினர் குவிப்பு

மியன்மாரின் பல நகர வீதிகளில் இராணுவ வாகனங்கள் அதிகரிக்கப்பட்டு மேலும் துருப்புகள் குவிக்கப்பட்ட நிலையிலும் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக நேற்று திங்கட்கிழமையும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இராணுவம் மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்ப்போரை ஒடுக்குவதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தக் கோரி கடந்த 10 நாட்களாக மியன்மாரில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக முறையில் தேர்வான தலைவர்களை விடுதலை செய்யும்படியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

எனினும் ஆளும் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி மேலும் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கிப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் நேற்று தெரிவித்துள்ளார்.

இராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட தினத்தன்று அதிகாலையிலேயே சூச்சி மற்றும் அரச தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சூச்சியின் ஆளும் கட்சி கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. எனினும் அந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக இராணுவம் ஆதாரம் இன்றி குற்றம்சாட்டியது.

உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 1 மணி தொடக்கம் காலை 9 மணி வரை இணைதள சேவை துண்டிக்கப்பட்ட நிலையில் அது மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

மியன்மாரில் இந்த இணையத் தடைக்குப் பின்னர், வழக்கமாக இணைய சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் வெறும் 14 வீதம் தான் இருப்பதாக, நெட்பிளாக் என்கிற கண்காணிப்புக் குழு ஒன்று கூறுகிறது.

“இரவு நேரங்களில் சோதனை செய்வது, மக்களின் உரிமைகளைப் பறிப்பது, மீண்டும் இணையத்தை முடக்கியது போன்றவைகள் அடக்குமுறையின் அறிகுறிகளே. இது மியன்மார் மக்கள் மீது இராணுவம் போர் தொடுப்பது போன்றுள்ளது. இராணுவ ஜெனரல்கள் இதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள்” என ஐ.நா சபைக்கு மியன்மார் விவகாரம் தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பிக்கும் டொம் ஆண்ட்ரூவ்ஸ் தன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

“மியன்மாரில் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு எதிராக, அந்த நாட்டு இராணுவம் வன்முறையில் இறங்கக் கூடாது” என ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இதேவேளை இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் படையினருக்கு இடையூறு செய்தால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் என்று இராணுவம் எச்சரித்துள்ளது. இராணுவத் தலைவர்கள் மீது “வெறுப்பு அல்லது அவதிப்பில்” ஈடுபட்டால் நீண்ட சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Tue, 02/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை