தமிழக மீனவர்கள் நால்வரது உயிரிழப்பு; இலங்கை அரசின் விசாரணை முடிவுக்கு இந்தியா காத்திருப்பு

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்

 

இலங்கையில் 04 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட துயர சம்பவம் தொடர்பில், இலங்கை அரசின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோமென இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இராமேசுவரம் அடுத்த தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 04 மீனவர்கள், கடந்த  மாதம் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். ஜனவரி 18ஆம் திகதி அவர்களது படகு, இலங்கை கடற்படை ரோந்து படகுடன் மோதி மூழ்கியது.

இதில் 4 மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம், இங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.இந்த துயர சம்பவம் தொடர்பான கேள்விகள், இந்திய பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுந்தன. அவற்றுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;

இந்த துயர சம்பவத்தில், இலங்கைக்கு நாம் நமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். அதன் பலனாக அவர்கள் ஒரு விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்த விவகாரத்தை மத்திய அரசு மிக மிக கடுமையாக எடுத்துக்கொண்டுள்ளது என்பதை நான் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது இலங்கையில் இந்திய மீனவர்கள் எவரும் சிறையில் இல்லை. சமீப காலம் வரை 09 பேர் சிறையில் இருந்தனர். அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர். இப்போதைய நிலவரப்படி இந்திய மீனவர்களின் (தமிழக மீனவர்களின்) 62 படகுகள் இலங்கையில் உள்ளன. அவற்றை இலங்கையிலிருந்து விடுவிக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

முன்பு 173 படகுகள் இருந்தன. அவற்றில் 36 படகுகள் மீட்கப்படக்கூடியவை. மீட்க முடியாத படகுகளுக்கான நடைமுறைகள் தற்போது விவாதத்திலுள்ளன. எவற்றை திரும்பப் பெற முடியுமோ, அவற்றை திரும்பப்பெறுவோம். எவற்றை மீட்க முடியுமோ அவற்றை மீட்போம். அதற்கான முயற்சி எடுக்கிறோம். மீட்பை விரைவு படுத்துவோம்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு மிக கூடுதலான முன்னுரிமையை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் இலங்கையால் பிடிக்கப்படுவது பற்றிய தகவல் கிடைக்கிறபோதெல்லாம், தூதரக ரீதியில் இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் எடுத்துச் செல்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Sat, 02/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை