இந்தோனேசிய பாடசாலைகளில் கட்டாய மத ஆடைகளுக்கு தடை

வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டாயப்படுத்தப்படுவதான குற்றச்சாட்டை அடுத்து இந்தோனேசிய அரச பாடசாலைகளில் கட்டாய மத ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 'இது தனிப்பட்டவர்களின் ஓர் உரிமை. பாடசாலையின் முடிவு அல்ல' என்று இந்தோனேசிய கல்வி மற்றும் கலாசார அமைச்சர் நதீம் மகரிம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடப்பில் உள்ள சட்டங்களை அகற்றுவதற்கு பாடசாலைகளுக்கு அரசு 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. அதற்கு கட்டுப்படாவிட்டால் அவர்கள் தடைக்கு முகம்கொடுக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

படங் நகரில் இருக்கும் பயிற்சிக் கல்லூரியில் கிறிஸ்தவ மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் பர்தா அணியும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்தத் தடை கொண்டுவரப்பட்டுள்ளது. பர்தா அணிய அந்த மாணவி மறுத்திருப்பதோடு பாடசாலை அதிகாரிகளிடம் அவரது பெற்றோர் பேசியுள்ளனர்.

'கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் எனது மகளுக்கு பர்தா அணிவதற்கு கோரப்படுகிறது. அதற்கு அவர் தான் முஸ்லிம் இல்லை என்று மறுத்து வந்தார்' என்று அந்த மாணவியின் தந்தை எலியானு ஹியா பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 'எனது மகள் பர்தா அணிந்தால் எனது மகளின் அடையாளம் பற்றி நான் பொய் கூறுவதாக இருக்கும்' என்றும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை அதிகாரிகளுடன் அந்தத் தந்தை இதுபற்றி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று இரகசியமாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டதை அடுத்தே இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sat, 02/06/2021 - 16:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை