சுற்றுலாத்துறை சார்ந்த வர்த்தகர்களுக்கு மானியங்களை வழங்க அரசு தீர்மானம்

இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப சுற்றுலாத்துறைசார்ந்த வர்த்தகர்களுக்கு தொடர்ந்து மானியங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலாத்துறை சார்ந்த வியாபாரிகள் கொவிட் நெருக்கடி காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறந்தபோது அதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்தருணத்தில் வெளிநாட்டில் இருக்கும் இலங்கை பணியாளர்களை விடுத்து சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு அழைத்துவருவதாக எம்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினர். ஆனால், பதிவுசெய்துள்ள அனைத்து பணியாளர்களையும் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்தச் செயற்பாடு ஒருபுறமும் சுற்றுலாப்பயணிகளை அழைத்துவரும் செயற்பாடு ஒருபுறமும் இடம்பெறுகிறது.

சுற்றுலாத்துறைசார்ந்துப் பணியாற்றும் வியாபாரிகளுக்கு சலுகைகளை மாத்திரம் வழங்கி அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிவிட முடியாது. அதற்கான ஒரே வழிதான் நாட்டை சுற்றுலாத்துறையினருக்காக திறந்துவிடல். அந்தவிடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியதால்தான் அதனை செய்தும் உள்ளோம். உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்கள் அதனைத்தொடர்ந்து கொவிட் நெருக்கடி காரணமான எமது நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்ந்து கடும் வீழ்ச்சியையே சந்தித்தது. உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்திருந்த தருணத்தில் மேல்மட்டத்தில் உள்ள சுற்றுலாத்துறைசார்ந்த வர்த்தகர்களுக்கு மாத்திரமே கடந்த அரசாங்கம் சலுகைகளை வழங்கியிருந்தது.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தொடர்பில் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவர்கள் தமது சொத்துகளை விற்பனை செய்து மீண்டும் சுற்றுலாத் தொழிலை ஆரம்பித்தனர். ஆனால், கொவிட் நெருக்கடியால் மீண்டும் சுற்றுலாத்துறை வீழந்;தது. என்றாலும் முதல்கட்டமாக 72 மில்லியன் மானியத்தை சுற்றுலாத்துறை வர்த்தகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முதல்கட்டத்தில் வழங்கியிருந்தோம். எதிர்காலத்திலும் சலுகைகளை வழங்க எதிர்பார்க்கிறோம். சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைவருக்கும் சலுகைகளை வழங்கியுள்ளோம். நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் இவ்வாறு நிவாரணம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால், பதிவுசெய்யப்படாதவர்களை அடையாளம் காண்பது கடினமாகும்.

சம்ஷ் பாயிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/12/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை