சவூதி மன்னருடன் பைடன் முதல் முறை உரையாடல்

மனித உரிமை பற்றி வலியுறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதல் முறை சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதில் அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடான சவூதியுடனான உறவை புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் எதிர்பார்ப்பை பைடன் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு அமெரிக்கா அளிக்கும் முக்கியத்துவம் பற்றி இதன்போது பைடன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சவூதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பில் அமெரிக்காவின் அறிக்கை வெளியாகவிருக்கும் நிலையிலேயே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

விரைவில் வெளியாகவிருந்த இந்த அறிக்கையில் மன்னரின் மகனான முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் பெயரும் உட்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

பைடனுக்கு முன்னர் பதவியில் இருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சவூதியுடன் நெருக்கமான உறவை பேணி வந்தார்.

இந்த ரகசிய அடிக்கையை வெளியிடுவதை டிரம்ப் நிர்வாகம் தடுத்து வந்ததோடு சவூதியுடனான உறவை பலப்படுத்துவதில் அதிக அவதானம் வெலுத்தினார்.

எனினும் சவூதி தொடர்பிலான சில விடயங்களில் கடும் நிலைப்பாட்டை எடுக்க பைடன் எதிர்பார்த்துள்ளார்.

துருக்கியின் ஸ்தான்பூல் நகரில் இருக்கும் சவூதி துணைத் தூதரகத்திற்குள் 2018 ஆம் ஆண்டு கசோக்கி கொல்லப்பட்டு அவரது உடல் தடயம் இன்றி அகற்றப்பட்டது. இந்தக் கொலை தொடர்பில் தமக்கு உள்ள தொடர்பை முடிக்குரிய இளவரசர் மறுத்தார்.

கசோக்கியை சவூதிக்கு அழைத்துவர அனுப்பப்பட்ட குழு ஒன்று சட்டவிரோதமாக செயற்பட்டு இந்தக் கொலையை செய்திருப்பதாக சவூதி கூறியது. இது தொடர்பில் சவூதி நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்த நிலையில் கசோக்கி குடும்பம் மன்னிப்பு அளித்ததை அடுத்து அது 20 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.

எனினும் சவூதி மன்னருடனான உரை தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கசோக்கியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

“சவூதி–அமெரிக்க செயற்பாட்டாளர்கள் பலரை சவூதி அண்மையில் விடுதலை செய்தது தொடர்பில் ஜனாதிபதி பாராட்டினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானிய ஆதரவுக் குழுக்களால் சவூதிக்கு உள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் அமெரிக்கா மற்றும் சவூதிக்கு இடையிலான நீண்டகால நட்புறவு பற்றியும் இரு தலைவர்களும் உரையாடியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

“இருநாடுகளுக்கு இடையிலான உறவுமுறையை எவ்வளவு வலிமையாகவும், வெளிப்படையாகவும் வளர்த்தெடுக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக வளர்த்தெடுக்கப் பணியாற்றுவேன் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சவூதி மன்னர் சல்மானிடம் கூறினார்” என வெள்ளை மாளிகையின் அறிக்கை கூறுகிறது.

“இருநாட்டுத் தலைவர்களும் வரலாற்று ரீதியிலான தங்கள் நட்புறவையும், தங்கள் பிரச்சினைகள் மற்றும் விருப்பங்களை இணைந்து தீர்த்துக் கொள்வோம் எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை