அமெரிக்காவில் கொரோனா பலி அரை மில்லியனைத் தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியுள்ளது. இது உலகில் அதிக உயிரிழப்பு எண்ணிக்கை என்பதோடு மொத்த உயிரிழப்பில் 20 வீதமாக உள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் அமெரிக்காவின் முதலாவது கொரோனா உயிரிழப்பு இடம்பெற்று ஓர் ஆண்டு கடந்திருக்கும் தருணத்தில் கடந்த திங்கட்கிழமையே அந்த எண்ணிக்கை 500,000ஐ தொட்டது.

“500,071 உயிரிழப்பு என்ற உண்மையிலேயே மனதுக்கு வேதனை தரும் மைல்கல் ஒன்றை நாம் இன்று எட்டியிருக்கிறோம்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். இந்த உயிரிழப்புகளுக்காக கடந்த திங்கட்கிழமை மாலை வெள்ளை மாளிகையில் அவர் மௌன அஞ்சலி செலுத்தினார். இதன்போது உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.

“முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் மற்றும் வியட்நாம் போர் ஆகிவற்றில் ஒட்டுமொத்தமாக பதிவான உயிரிழப்புகளை விடவும் இந்த பெருந்தொற்றினால் அமெரிக்கா ஓர் ஆண்டுக்குள் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. உலகின் வேறு எந்த நாட்டை விடவும் இந்த வைரஸினால் அதிக உயிரிழப்பை சந்தித்திருக்கிறோம்” என்றும் பைடன் தெரிவித்தார்.

அமெரிக்க வரலாற்றில் மிகுந்த துயரமிக்க இந்தத் தருணத்தை அனுசரிக்கும் நோக்கில், அனைத்து அரசாங்க கட்டடங்களில் உள்ள தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பைடன் நிர்வாகம் சமூக கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு மருந்து விநியோகத்தை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் அமெரிக்காவில் அண்மைய வாரங்களில் நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை