கிழக்கு முனையம் தொடர்பிலான வேலைநிறுத்தம் அவசியமற்றது

உண்மையை விளக்க தொழிற்சங்கங்களுக்கு பிரதமர் அழைப்பு

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொழிற்சங்கத்தினர் என்னிடம் வந்தால் நான் அவர்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்துவேன் என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை எவருக்கும் விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு விடவோ அரசாங்கம் எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகம் எமது நிர்வாகத்தின் கீழேயே உள்ளது. தொழிற்சங்கங்களும் அதனை அறியும்.

அந்த நிலையில் அந்த முனையத்தை விற்பது அல்லது குத்தகைக்கு விடுவது தொடர்பில் நாம் இதுவரை பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை.

அதனால் அதனை சிக்கலுக்குள்ளாக்கத் தேவையில்லை. வேலைநிறுத்த போராட்டங்களும் அவசியமில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு ஊடகவியலாளர்கள் கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனரே என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர்;

எதிர்க்கட்சியினருக்கு குற்றஞ்சாட்டுவதற்கு வேறு எதுவும் இல்லாததால் இவ்வாறு கூறி வருகின்றனர்.

நாம் கிழக்கு முன்னேற்றி எவருக்கும் விற்கப் போவதில்லை.

துறைமுக தொழிற்சங்கத்தினர் என்னோடு வந்து பேசினால் நான் உண்மை நிலையை தெளிவுபடுத்துவேன். அமைச்சரவையில் 99 வீதமானவர்கள் அதனை விற்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். வளங்களை விற்பது எமது கொள்கை யல்ல. அது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும்.அந்த கொள்கையைமுன்னெடுத்துச் செல்வதற்கு அல்ல மக்கள் எமக்கு அதிகாரம் வழங்கி உள்ளனர் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

 

Mon, 02/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை