வலைத்தள எழுத்தாளர் கொலை: பங்களாதேஷில் ஐவருக்கு தூக்கு

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் டாக்கா நகரில் மதச்சார்பற்ற வலைத்தள எழுத்தாளர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பங்களாதேஷ் நீதிமன்றம் ஐவருக்கு மரண தண்டனை விதித்துள்ளதோடு ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கி வந்த அவிஜித் ரோய் என்ற அந்த எழுத்தாளர் தலைநகர் டாக்காவில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் இருந்து திரும்பும் வழியில் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

மதச்சார்பற்றோர் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் ஒன்றாகவே இது இடம்பெற்றது. இதற்கு இஸ்லாமியவாத போராளிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்தத் தாக்குதலின்போது அவரது மனைவியும் இருந்ததோடு படுகாயத்திற்கு உள்ளான அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினார்.

அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட அன்சார் அல் இஸ்லாம் என்ற குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக நீதிமன்ற விசாரணையில் கூறப்பட்டது.

முக்கிய தாக்குதல்தாரி என சந்தேகிக்கப்படு முன்னாள் இராணுவ மேஜர் செயித் சியாஉல் ஹக் உட்பட இருவர் இன்றியே இந்த வழக்கு இடம்பெற்றது. அவர் மீதும் தூக்குத் தண்டை விதிக்கப்பட்டது.

ரோயின் கொலையுடன் தொடர்புபட்ட சரீப் என்ற பிரதான சந்தேகநபர் தலைநகரில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக 2016 ஜூன் மாதம் பொலிஸார் தெரிவித்தனர்.

Thu, 02/18/2021 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை