இன்று நாடு தழுவிய போராட்டம்; அனைத்து தரப்புக்கும் ஜீவன் அழைப்பு

தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள விடயம் தொடர்பில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இன்று 05 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படும் ஒருநாள் அடையாள வேலை தவிர்ப்பு போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்,இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,....

தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பளப் பிரச்சினை தொடர்ச்சியாக சென்று கொண்டிருப்பதால் இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அரசாங்கத்திற்கு அன்று அவர் முதலாவது கோரிக்கையாக இந்த 1,000 ரூபா சம்பளப் பிரச்சினையை முன்வைத்தார்.

இதனை தீர்த்து வைக்கும் வகையிலேயே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினார். அதற்கமைய இந்த அரசாங்கம் சம்பளப் பிரச்சினை குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் முழுமையாக ஆதரவு வழங்குகின்றனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை கடந்த மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது கம்பனிகள் மாற்று நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அடிப்படை சம்பளமாக 725 ரூபாவும் ஏனைய கொடுப்பனவுகளுடன் மொத்தமாக 1150 ரூபா சம்பளம் தருவதாக கூறுகின்றார்கள். ஆனால் எங்களுடைய நிலைப்பாடானது அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபா வேண்டும். இதனால் அன்றைய தினம் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இன்று 5ஆம் திகதி பெருந்தோட்ட மக்களுக்காக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

இதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். கட்சி,தொழிற்சங்க பேதங்களின்றி மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் இன்று 05ஆம் திகதி முன்னெடுக்கப்படும் நாடு தழுவிய பூரண கடையடைப்பு (ஹர்த்தால்) போராட்டத்திற்கு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவ ஒன்றியமும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை குறூப் நிருபர்

Fri, 02/05/2021 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை