ஈக்வடோர் சிறைச்சாலை கலவரங்களில் 75 பேர் பலி

ஈக்வடோரில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு சிறைச்சாலை கலவரங்களில் குறைந்தது 75பேர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவாயகுயில், கியுன்கா மற்றும் லடகுங்கா நகரங்களில் இடம்பெற்ற இந்த கலவரங்களுக்கு போட்டி குற்றக் கும்பல்களே காரணம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கைதிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறைச்சாலைகளுக்குள் இந்த இரு குழுக்களும் தலைமை போட்டியில் ஈடுபட்டிருப்பதாக ஈக்வடோர் சிறைச்சாலை நிறுவன பணிப்பாளர் எட்முண்டொ மொன்காயோ தெரிவித்துள்ளார்.  சிறைச்சாலைகளின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவர அதிகாரிகளால் முடிந்திருப்பதோடு அங்கு 800மேலதிக பொலிஸார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கலவரத்தின்போது பல பொலிஸாரும் காயமடைந்தபோதும் பாதுகாப்பு தரப்பினரில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று மொன்காயோ தெரிவித்தார்.

சிறைச்சாலை காவலர்களை பணயக் கைதிகளாப் பிடித்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவே இந்த கலவரங்கள் ஆரம்பமாகியுள்ளன. சிறைச்சாலைகளுக்கு வெளியில் பல அம்புலன்ஸ் வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Thu, 02/25/2021 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை