மியன்மாரில் 7ஆவது நாளாகவும் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவத் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருக்கும் நிலையில் அந்நாட்டில் ஏழாவது நாளாகவும் நேற்று ஆர்ப்பட்டாங்கள் இடம்பெற்றன.

இராணுவ ஜெனரல்களை அதிகாரத்தை கைவிடும்படி கோரி நாடெங்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியாக இடம்பெற்றபோதும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்தும் தண்ணீர் பீச்சியடித்தும் இரப்பர் தோட்டக்களால் துப்பாக்கிச் சூடு நடத்தியும் பலப்பிரயோகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஆசிரியர்கள், அதிகாரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வான் கட்டுப்பாட்டாளர்கள் உட்பட அரச ஊழியர்களும் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும்படி கோரி வீதிக்கு இறங்கியுள்ளனர்.

எனினும் இந்த ஊழியர்களை பணிக்குத் திரும்பும்படி இராணுவத் தளபதி மின் அவுங் ஹங் அழைப்பு விடுத்துள்ளார்.

“உணர்வுகளை முன்னிறுத்தாது பணிகளில் இருந்து வெளியேறி இருப்பவர்கள் நாடு மற்றும் மக்களின் நலனுக்காக தமது பணிகளுக்கு உடன் திரும்பும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் அழைப்பு விடுத்ததாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய தடையில் மின் அவுங் ஹங் மற்றும் முன்னிலை ஜெனரல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். மியன்மாரின் 1 பில்லியன் டொலர் நிதியை இராணுவம் பெறுவதை தடுக்கும்படியும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் வன்முறையை அதிகாரித்தால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஜெனட் யெல்லன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது தொடக்கம் இதுவரை 260க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆளும் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி மற்றும் ஏனைய மூத்த தலைவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Sat, 02/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை