கொவிட்-19: தடுப்பூசிகளில் 75 வீதமானதை 10 நாடுகளே பயன்படுத்துகின்றன

கொவிட்–19 தடுப்பூசி விநியோகம் 'பெருமளவு சீரற்றதும் நியாயமற்ற' முறையிலும் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. அனைத்து தடுப்பூசிகளில் 75 வீதமானதை வெறும் 10 நாடுகள் பயன்படுத்துவதையும் அது சுட்டிக்காட்டியது.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் உயர்மட்டக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றபோது ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் உரையாற்றினார். அதில் 130 நாடுகளில் இன்னும் ஒரு தடுப்பூசி கூடப் போடப்படவில்லை என்பதை அவர் குறிப்பிட்டார்.

“இந்த நெருக்கடியான நேரத்தில் உலகளாவிய சமூகத்திற்கு முன் தடுப்பூசியை சமமாகப் பகிர்வது மிகப்பெரும் தார்மீக சோதனையாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

தேவையான அதிகாரம், அறிவியல் நிபுணத்துவம், தயாரிப்பு, நிதித் திறன்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை கொண்டுவருவதற்கு குட்டரஸ் அழைப்பு விடுத்தார்.

தடுப்பூசிகள் சமமான முறையில் விநியோகிக்கப்படவில்லை என்றால் உலகம் அபாயமிக்க நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என்று இந்தக் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.

உலகின் வறிய மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வாங்கி விநியோகிப்பதற்கு உலக சுகாதார அமைப்பின் கொவெக்ஸ் திட்டம் கொண்டுவரப்பட்டபோதும் அது ஏற்கனவே தனது திட்டத்தை ஆரம்பிக்க தவறியுள்ளது. மறுபுறம் செல்வந்த நாடுகள் தடுப்பு மருந்தை வழங்குவதில் தீவிரம் காட்டியுள்ளன.

கொவெக்ஸ் திட்டத்திற்காக காத்திருக்க முடியாத பல அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் சுயமாக தடுப்பு மருந்துகளை பெறும் ஒப்பந்தங்களுக்கு அண்மைக் காலத்தில் முயன்று வருகின்றன.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் 109 மில்லியனாக அதிகரித்திருப்பதோடு குறைந்தது 2.4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். செல்வந்த நாடுகளில் உற்பத்திச் சிக்கல் காரணமாக தடுப்பு மருந்தை வழங்குவதில் தட்டுப்பாடு நிலவும்போது பல நாடுகளும் இன்னும் தமது தடுப்பு மருந்து திட்டத்தை ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 02/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை