16 நாட்களாக தொடரும் ஒல்ட்டன் தொழிலாளர் பணிப்பகிஷ்கரிப்பு

ஒல்ட்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரையும் இடமாற்றம் செய்யக்கோரியை ஒல்ட்டன் மேல்பிரிவு கீழ்பிரிவு, கிங்கோரா, நிலாவத்தை பிரிவுகளை சேர்ந்த சுமார் 650 தொழிலாளர்கள் கடந்த 16 நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையும் மூடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 05 ஆம் திகதி ஆயிரம் ரூபாய் சம்பளம் உயர்வு கோரியே இடம்பெற்ற ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

இந் நிலையில் 03 ஆம் திகதி ஓல்ட்டன் தோட்ட தேயிலை தொழிற்சாலையிலிருந்து பொதி செய்யப்பட்ட

தேயிலை தூள்களை தோட்ட நிர்வாகம் எடுத்துச்செல்ல முற்பட்ட போது தொழிலாளர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்துகையில் தோட்ட முகாமையாளர் பெண் தொழிலாளி ஒருவரை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் முகாமையாளரையும் உதவி முகாமையாளரையும் இடமாற்றம் செய்யக்கோரி பணிப்பகிஷ்கரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் 16 ஆம் திகதி தோட்ட நிர்வாகம் வெளியிலிருந்து சிலரை கொண்டுவந்து கொழுந்து பறித்துள்ளது. எனினும் தோட்டத் தொழிலாளர்கள் அவர்களை விரட்டியடித்ததுடன் முகாமையாளரின் விடுதிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது தோட்ட முகாமையாளரும் உதவி முகாமையாளரும்

தொழிலாளர்களினால் தாக்கப்பட்டதாக கூறி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் முகாமையாளர்கள் இருவரும் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகாமையாளர்களின் முறைப்பாட்டுக்கமைய ஒரு ஆண் தொழிலாளியும் 07 பெண் தொழிலாளர்களையும் மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவர்களை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

இவ்வாறான நிலையிலேயே 17 ஆவது நாளான நேற்றுமுன்தினம் ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது,

நாங்கள் 16 நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத நிர்வாகம் வெளியாரை வைத்து வேலை செய்ய முயற்சிக்கின்றனர்’

இச்சம்பவம் தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு அறிவித்தபோது இதுவரையிலும் யாரும் கண்டுகொள்ள வில்லை. இதேவேளை மனித உரிமைகள் முதலுதவி நிலையத்தில் முறைபாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த தோட்ட முகாமையாளர் சுபாஷ் நாராயணன்,

கடந்த 05 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தம் இடம்பெற இருந்த நிலையில் கடந்த 03 ஆம் திகதி பறிக்கப்பட்ட பச்சை தேயிலை கொழுந்தினை தோட்ட தொழிற்சாலையில் அரைக்க விடாது தொழிலாளர்கள் இடையூறு செய்தமையினால் 15 இலட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக முறைப்பாட்டு செய்துள்ளோம்.

இந்நிலையில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் நேற்றுமுன்தினம் விடுதிக்கு வந்து எங்கள் மீது சானத்தை கரைத்து ஊற்றி தாக்கினர் என்றார். சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

 

Sat, 02/20/2021 - 13:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை