இரு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி விபத்துக்களில் 14 பேர் பலி

- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி விபத்துக்களினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் ஏழு வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ள நிலையில் அதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களில் இறந்தவர்களில் 5 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்றும் மேலும் நான்கு பேர் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை மிக மோசமானதும் கவலைக்குரியதும் என தெரிவித்துள்ள அவர் வீதி விபத்துக்கள் மூலம் உயிரிழப்போர் மற்றும் காயமடைவோர் தொகை அதிகரித்து வருகின்றதுஎன்றும் தெரிவித்துள்ளார். எல்லை மீறிய வேகமும் வீதி சமிக்ஞைகளை அலட்சியப்படுத்துவது மே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏக்கல விமானப்படை முகாமுக்கு அருகில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகாலை 6. 45 மணியளவில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலில் மோதுண்டதில் மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காரின் சாரதி மற்றும் இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 49,47 மற்றும் 69 வயதுகளை கொண்டவர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.அதேவேளை எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீதுபஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் கடவத்தை பகுதியில் கொழும்பு கண்டி வீதியில் லொறி ஒன்று மோதியதில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 02/02/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை