சீன சுரங்கத்தில் சிக்கியவர்கள் ஒரு வாரத்திற்குப் பின் செய்தி

சீனாவின் கிழக்குப் பகுதியில் தங்கச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்கிய ஊழியர்கள் ஒரு வாரத்திற்குப் பின் மீட்புப் படையினருக்குத் துண்டுச்சீட்டு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இந்த வெடிப்பில் 22 பேர் சிக்கிக்கொண்டுள்ளனர். சில நாட்கள் அவர்களுடன் தொடர்பு ஏதும் இல்லாத நிலையில் கடந்த ஞாயிறன்று அவர்களிடமிருந்து சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து மீட்புப் படையினர் சுரங்கத்தினுள் துளையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

துளை வழியாகக் கம்பி மூலம் உணவு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கம்பி வழியே, சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களில் 12 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக எழுதப்பட்ட துண்டுச்சீட்டு கிடைத்தது.

உடனடியாகத் தங்களுக்குத் தேவைப்படும் மருந்து மாத்திரைகளை அனுப்பி வைக்குமாறு அதில் எழுதப்பட்டிருந்தது.

சிக்கியிருக்கும் நால்வர் காயமடைந்துள்ளதாக அதன்மூலம் தெரியவந்தது. மீட்புப் படையினர் தேடும் பணிகளைத் தொடர வேண்டுமென்றும், பாதுகாப்பாகத் தாங்கள் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாகவும் அந்த சீட்டில் எழுதப்பட்டிருந்தது. எஞ்சிய 10 ஊழியர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

வெடிப்பு தொடர்பில் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போதிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதால், சீனச் சுரங்கங்களில் அவ்வப்போது இத்தகைய விபத்துகள் ஏற்படுவதுண்டு.

Tue, 01/19/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை