இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் ஜாவா கடலில் மீட்பு

இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளான போயிங் 737–500 பயணிகள் விமானத்தின் பாகங்களை ஜாவா கடவில் சுழியேடிகள் கண்டுபிடித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

62 பேருடன் கடந்த சனிக்கிழமை காணாமல்போன இந்த விமானத்தில் இருந்து மனித உடல் பாகங்கள், ஆடைகள் மற்றும் ஊலோகத் துண்டுகளை மீட்பாளர்கள் கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.

தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விரைவிலேயே இந்த விமானம் கடலில் விழுந்துள்ளது. மேற்குக் கலிமண்டான் மாகாணத்தின் பொன்டியானக்கை நோக்கி புறப்பட்ட ஸ்ரிவிஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் நான்கு நிமிடங்களில் ராடார் திரையில் இருந்து மாயமானது.

இந்நிலையில் தேடுதலில் ஈடுபட்டிருந்த இராணுவக் கப்பல் ஒன்றுக்கு நேற்று விமானத்தில் இருந்து சமிக்ஞை கிடைத்தது. இந்நிலையில் கடலில் சுமார் 26 மீற்றர் ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

விமானப் பதிவுப் பாகங்களுடன் விமான உடல்பகுதியின் உடைந்த துண்டுகளும் மீட்கப்பட்ட பொருட்களில் இருப்பதாக இந்தோனேசிய இராணுவத் தளபதி ஹாதி ஜஹன்டோ தெரிவித்துள்ளார்.

“அந்த இடத்திலேயே விமானம் விபத்துக்கு உள்ளாகி இருப்பது எமக்கு உறுதியாகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காலநிலை குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர் தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதோடு யாரும் உயிர்தப்பி இருப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளது. காணாமல்போன விமானத்தில் 50 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்ததாகவும் அவர்களில் 7 பேர் சிறார்கள், 3 பேர் குழந்தைகள் என்றும் இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் புடி கர்ய சுமாடி தெரிவித்தார்.

இந்த விமானம் பறந்துகொண்டிருந்த உயரம் திடீரென ஒரே நிமிடத்தில் 10 ஆயிரம் அடி குறைந்தது என்று விமான கண்காணிப்பு இணைய தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த விமானம் போயிங் விமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றாலும், அண்மைய ஆண்டுகளில் அடுத்தடுத்த விபத்துகளால் சர்ச்சைக்குள்ளான 737 மேக்ஸ் ரகம் அல்ல. பதிவுத் தகவல்களின் படி, 26 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விமானத்தின் வடிவம் போயிங் 737–500 ஆகும்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இன்னொரு இந்தோனேசிய விமான சேவை நிறுவனமான லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து 189 பேர் இறந்தனர்.

அந்த விமானமும் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Mon, 01/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை