போதைப்பொருள் வலையமைப்பை முற்றாக முறியடிக்க அரசு முடிவு

தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தீர்மானம்

மக்கள் பாதுகாப்பு அமைச்சர், நீதி அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்று கலந்துரையாடல்

இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பை முற்றாக முறியடிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பத்தரமுல்லை இசுறுபாயவில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று திங்கட்கிழமை இந்த விடயம் தொடர்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நீதி அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரட்ன, பிரதி பொலிஸ் மாஅதிபர் உட்பட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன,

போதைப் பொருள் வர்த்தகர்கள், கடத்தல்காரர்கள் மற்றும் பகிர்ந்தளிப்பவர்களை சுற்றிவளைப்பது கலந்துரையாடலின் விசேட கருப்பொருளாக அமைந்தது. இந்த நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ள உரியவர்களை சட்டத்தின்முன் கொண்டுவருவது, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்துபவர்களை நாட்டுக்கு கொண்டுவருதல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை முறியடித்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. சிறுவர் துஸ்பிரயோக வழக்குகளை துரிதகதியில் விசாரணைக்கு உட்படுத்தி மேல் நீதிமன்றங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தல், அரச இரசாயன பகுப்பாய்வங்களில் சாட்சியங்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளை துரிதப்படுத்தல், விசேட வழக்குகள் அதாவது மோசடிகளுடன் தொடர்புடைய வழக்குகளை துரிதப்பத்துவதன் ஊடாக நாட்டின் சட்டத்தை நிலைநாட்டல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டது.

அத்துடன், இந்த விடயங்களை துரிதப்படுத்துவதில் காணப்படும் சட்ட சிக்கல்களை விரைவாக மறுசீரமைத்து மக்கள் அச்சம் மற்றும் அச்சுறுத்தல்களின்றி வாழ்வதற்கும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், போதைப்பொருள்களற்ற இலங்கையை உருவாக்குவதும் கலந்துரையாடலில் முக்கிய அம்சங்களாக இருந்தன.

-சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Tue, 01/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை