பைடனின் பதவியேற்பை ஒட்டி அமெரிக்காவில் உஷார் நிலை

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் வரும் புதன்கிழமை பதவி ஏற்கவுள்ள நிலையில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் அச்சம் காரணமாக 50 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர் பாராளுமன்றக் கட்டடத்தில் ஏற்பட்ட கலகம் போன்ற சம்பவம் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு வொசிங்டன் டி.சியில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து 50 மாநில சட்டமன்றங்களில் ஆயுதம் ஏந்திய ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி நடத்தும் வாய்ப்பு இருப்பதாக எப்.பி.ஐ பாதுகாப்புச் சேவை தெரிவித்துள்ளது.

குறிப்பாக நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அதிக போட்டி இருந்த விஸ்கொன்சின், மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் அரிசோனா மாநிலங்களில் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் எச்சரித்துள்ளனர்.

டிரம்பின் அடிப்படை அற்ற தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பிரதான மாநிலங்களாக இவை உள்ளன.

அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளன. பாராளுமன்றக் கட்டடத்தை ஒட்டிய வீதிகளும் மூடப்படுகின்றன.

ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வை ஒட்டி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரளும் நெசனல் மோல் பகுதியை மூடும்படி உளவுச் சேவை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிறுவனமே ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பதவி ஏற்பு நிகழ்வுக்காக தலைநகருக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளும்படி பைடன் தரப்பினர் மக்களை ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளனர்.

Mon, 01/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை