சவால்களுக்கு மத்தியில் சுகாதாரத்துறை ஆலோசனைகள் பின்பற்றப்பட்டே பாடசாலைகள் திறப்பு

- கல்வியமைச்சின் செயலாளர்

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இரண்டாம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் பதினோராம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கொரோன வைரஸ் சூழ்நிலையில் பாடசாலைகளை திறந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது பெரும் சவாலான விடயம் என தெரிவித்த அவர் சுகாதாரத்துறையினரின் வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி முழுமையான கண்காணிப்பின் கீழ் பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க கல்வியமைச்சின் வழிகாட்டலின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலையின் சுகாதார மேம்பாட்டு குழு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுவது முக்கியம் என்றும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை ஜனவரி 11ம் திகதி முதல் பாடசாலைகளைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் 6,7, 8,9 மற்றும் 10ஆம் திகதிகளில் பாடசாலையில் சுகாதார மேம்பாட்டு குழு மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோருடைய ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு அவர்களினால் பின்பற்றப்பட வேண்டிய முறைகள் தொடர்பில் கல்வி அமைச்சு உரிய பணிப்புரைகள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கியுள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஆலோசனைகள் உள்ளடங்கிய விடயங்களை பார்வையிடுவதற்கு www.moe.gove.lk என்ற கல்வியமைச்சின் இணையதளத்தை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/06/2021 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை