சட்ட திருத்த முன்னெடுப்பு குறித்து நீதியமைச்சருடன் கலந்துரையாடல்

முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள சீர்திருத்த ஆலோசனைக்குழு அடுத்த வாரம் நீதி அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து சட்ட திருத்த முன்னெடுப்பு குறித்து ஆராய உள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி நாமிக் நபாத் தெரிவித்தார். இந்தக் குழு இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் கடந்த நல்லாட்சியில் நீதி அமைச்சருக்கு வழங்கிய அறிக்கைகளையும் கவனத்திற் கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர ஏனைய அமைப்புகள் தரப்பினரின் யோசனைகள் மற்றும் கருத்துக்களையும் பெறும் என்றும் அவர் கூறினார்.

சகல தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே இக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவித்தார்.

நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்துள்ள குழுவில் இதில் சட்டத்தரணிகள், உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் அடங்குகின்றனர்.

இக்குழுவின் தலைவராக சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் குழு உறுப்பினர்களாக முன்னாள் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப், சட்டத்தரணிகளான எஸ்.எம்.எம். யாஸீன், எம்.ஏ.எம். ஹக்கீம், எமிஸா தீகல்,எச்.எம். ருஷ்தி, சபானா குல் பேகம், அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூராமித், அஷ்ஷெய்க் முஈஸ் புஹாரி ஆகியோர் அடங்குகின்றனர்.

இக்குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (14) நீதி அமைச்சில் நடைபெற இருந்தபோதும் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை திருத்துவது தொடர்பாக நீண்டகாலமாக பேசப்பட்டு வருவதோடு கடந்த நல்லாட்சியிலும் இது தொடர்பில் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டு நீதி அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

திருமண வயதை 18 ஆக மட்டுப்படுத்தல் உட்பட பல திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருந்தது தெரிந்ததே.

ஷம்ஸ் பாஹிம்

 

Fri, 01/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை