கொழும்பு துறைமுக கிழக்கு முனையம்; வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் இல்லை

- அனுரகுமாரவின் கேள்விக்கு பிரதமர் பதில்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவ உரிமையை அல்லது பகுதியளவிலான உரிமையை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று புதன்கிழமை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் பிரமருக்கான கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வியில்,

தெற்காசிய வலையத்தில் கப்பல் போக்குவரத்தில் மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகமாக கொழும்பு துறைமுகம் உள்ளது. ஐரோப்பிய, ஆப்பிரிக்க போக்குரத்து முனையங்களை இணைக்கும் பிரதான அமைவிடமாகவும் இறக்குமதி, ஏற்றுமதியில் 50 இலட்சத்திற்கும் அதிகமான கொள்கலன்களில் சேவைகள் இடம்பெறும் பெறுமதியான அமைவிடத்தையும் கொழும்பு துறைமுகம் கொண்டுள்ளது. இவ்வாறு முக்கிய அமைவிடத்தை கொண்டுள்ள கொழும்பு துறைமுகத்தின்
தெற்கு முனையத்தின் உரிமம் தற்போதைய சூழலில் 35 வருடங்கள் இலங்கைக்கு இல்லாது போயுள்ளது. மற்றுமொறு பெறுமதிமிக்க முனையமாகவுள்ள கிழக்கு முனையத்தை வெளிநாடு ஒன்றுக்கு தாரைவார்க்க அரசாங்கம் தயாராகியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளிகியுள்ளன.

கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்குவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசாங்கம் தயாராகியுள்ளதா? கிழக்கு முனையம் தொடர்பில் சமகால அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம் யாது? என கேள்வியெழுப்ப விரும்புகிறோம் என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,

2005ஆம் ஆண்டுமுதல் 2010ஆம் ஆண்டுவரை நான் ஜனாதிபதியாக பதவிவகித்திருந்த காலகட்டத்தில் 72 இலட்சம் கொள்கலன்களில் சேவைகள் இடம்பெறும் வகையில் மூன்று அங்கங்களாக தெற்கு முனையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தது. உரிய நடைமுறைகளுடன் அரச மற்றும் தனியார் கூட்டு வேலைத்திட்டமாக 35 வருடங்கால ஒப்பந்தத்தின் பிரகாரம் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைளை சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. எமது நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கை வகிக்கக்கூடியதாக கொழும்பு துறைமுகம் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் சிலதரப்பினருடன் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

2017.04.26 அன்று உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப் பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சை இணைத்துக்கொள்ளாது அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தக அமைச்சின் ஊடாக இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதேபோன்று 2019.05.28 அன்று இலங்கை அரசாங்கம் இந்திய மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளப் பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக துரிதமாக அதனை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமையை அல்லது பகுதியளவிலான உரிமையை வெளிநாட்டு நிறுவனமொன்று வழங்குவதற்கு எவ்வித தீர்மானத்தையும் எமது அரசாங்கம் எடுக்கவில்லை என்றார்.

Thu, 01/07/2021 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை