பரந்த அறிவால் மக்களின் மனங்களை வளப்படுத்தியவர்

எட்வின் ஆரியதாசவிற்கு ஜனாதிபதி இரங்கல்

ஊடகத் துறையின் சிறப்பான வளர்ச்சிக்கும், கலை மற்றும் பல்வேறு மானிடவியல் துறைகளின் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளரும் புலமைவாய்ந்த அறிஞருமான கலாகீர்த்தி கலாநிதி எட்வின் ஆரியதாசவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. பல்வேறு துறைகளில் அவர் கொண்டிருந்த பரந்த அறிவால் மக்களின் மனங்களை வளப்படுத்துவதற்கு அவர் செய்த பணிகளை நான் மிகுந்த கௌரவத்துடன் நினைவு கூருவதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எட்வின் ஆரியதாஸவின் மறைவு தொடர்பில் அனுதாப செய்தியொன்றை வௌியிட்டுள்ள அவர்,

பெரும்பான்மையான மக்கள் கலாநிதி எட்வின் ஆரியதாச அவர்களை ஊடகத் துறையில் ஒரு தலைசிறந்த முன்னோடி என்று அங்கீகரித்தனர். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தனது ஊடக வாழ்க்கையைத் ஆரம்பித்த அவர் ஆசிரியர் குழு உறுப்பினராக இருந்து பல தேசிய செய்திப் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு பங்களித்தார். சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சிறந்து விளங்கிய அவர், ஆங்கிலத்தில் தான் கற்றதை சிங்கள மொழி வாசகர்களுடனும் நேயர்களுடனும் தாராளமாக பகிர்ந்து கொண்டார். திரு. ஆரியதாச அவர்கள் தான் பெற்றிருந்த அறிவுச் செல்வத்தால் "நடமாடும் நூலகம்" என்று பாராட்டப்பட்டார்.

எட்வின் ஆரியதாச அவர்களின் கவர்ச்சிகரமான எழுத்து நடை மற்றும் சிக்கலான விடயங்களை எளிய மொழியில் விளக்கும் திறன் பல்லாயிரக்கணக்கான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக வாசகர்களை ஈர்த்தது. உலக பொருளாதார, அரசியல் மற்றும் சமூக போக்குகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருந்த ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர் மற்றும் வர்ணனையாளர் என்ற வகையிலும் அவர் பெயர் பெற்றிருந்தார். எமது நாட்டின் பல்கலைக்கழக அமைப்பில் ஊடகத் துறையை தாபித்து மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பாராட்டத்தக்கது.

ஒரு மொழியியல் நிபுணராக எட்வின் ஆரியதாச ஊடகத் துறை அகராதிக்கு பல கலைச் சொற்களை சேர்த்துள்ளார். எண்பதுகளில் தொலைக்காட்சியின் வருகையின் போது நிரலாக்கத்தில் அவர் செயற்திறமாக பங்கெடுத்தார். ஒரு அறிவியல் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற வகையிலும் எட்வின் ஆரியதாச புகழ் பெற்றிருந்தார். பல துறைகளில் அவர் வெளிப்படுத்திய புலமையின் காரணமாக 'கலாகீர்த்தி' உட்பட ஏராளமான உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

கலாநிதி எட்வின் ஆரியதாசவின் மறைவு எமது சமூகத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Tue, 01/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை