காத்தான்குடி வைத்தியசாலைக்கு வரும் எவரும் திருப்பி அனுப்பப்படவில்லை

- வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜாபீர்  

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வரும் எந்தவொரு கொவிட் நோயாளர்களும் திருப்பி அனுப்பப்படவில்லை. சுகமடைந்தே வீடு சென்றுள்ளனர். தாதிய உத்தியோகத்தர் ஒருவரை திருப்பியனுப்பியதாக கூறுவது அப்பட்டமான பொய் என காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.  

நேற்றுமுன்தினம் (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக  செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒரு தாதியை வைத்தியசாலையில் அனுமதிக்க மறுத்ததாக எனக்கெதிராக ஒரு முறைப்பாடு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இது தொடர்பாக நான் மிகவும் கவலையும் மன வேதனையும் அடைகின்றேன். இது வரை 1400க்கு மேற்பட்ட கொவிட் நோயாளர்கள் இலங்கையிலுள்ள 25மாவட்டங்களில் இருந்தும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அனுமதிக்கப்பட்டார்கள்.

இவர்களில் பாதுகாப்பு உத்தியோக்தர்கள், சிரேஷ்ட பதவிகளிலுள்ள உத்தியோகத்தர்கள் பல அரசாங்க உத்தியோகத்தர்கள் , பொது மக்கள் என பலரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  

இவர்களில் 1400பேரில் இது வலை 1150பேர் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் குறித்த தாதிய உத்தியோகத்தர் இரவு ஏழு மணிக்கு இந்த வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டார். நோயாளியொருவர் கொண்டு வரப்பட்டால் எங்களுக்கு அறிவிப்பார்கள். அதற்கு பொறுப்பாக வைத்தியர் பிரபா சங்கர் இருக்கின்றார் . 

 இதன் படி இந்த தாதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து வைத்தியரினால் பரிசோதிக்கப்பட்டு விடுதி 5ல் அனுதிக்கப்பட்டு அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இது என்மீது வைக்கப்பட்ட வீணான குற்றச் சாட்டு என்றும் இன உறவுக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற விடயமாகவே நான் இதனை பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்  

Fri, 01/22/2021 - 14:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை