சாய்ந்தமருது வீதியில் குப்பை குவிக்கப்பட்டதால் பரபரப்பு

- பொலிஸார், இராணுவத்தினர் ஸ்தலத்திற்கு விரைந்து நடவடிக்கை 

சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்தியசாலை வீதியின் நடுவே போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்திம் வகையில் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் நேற்று (20) பரபரப்பு ஏற்பட்டது. 

குறித்த வீதியில்  சில விஷமிகளினால் குவிக்கப்பட்டிருந்த அக்குப்பைகள் யாவும் அங்கிருந்து அகற்றப்பட்டு, சீர்செய்யப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ​ெடாக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார். 

இப்பாலத்திற்கு அருகாமையில் கல்முனை மாநகர சபையினால் தினசரி காலை 6.30மணி தொடக்கம் 7.30மணி வரையான நேரத்தில் திண்மக்கழிவகற்றல் வாகனம் நிறுத்தி, வைக்கப்பட்டு, குப்பைகள் சேகரிக்கப்படுவது வழமையாகும்.

எனினும் கடந்த இரண்டு நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களினால் அந்த வாகனம் குப்பை சேகரிப்புக்காக வரவில்லை. இதனால் பொது மக்கள் அவ் இடத்தில் குப்பைகளை வீசிவிட்டு சென்றுள்ளனர். 

இவ்வாறு சேர்ந்திருந்த குப்பைகளை இனம்தெரியாத நபர்கள் சிலர், நடு வீதியில் குவித்து, பாதையை மறித்து வைத்துள்ளனர்.

இவ்விடயம் கல்முனை மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து,  மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவினர் ஸ்தலத்திற்கு விரைந்து, பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன்  குப்பைகள் அகற்றப்பட்டு, வீதி சீர்செய்யப்பட்டதாக டொக்டர் அர்ஷாத் காரியப்பர் மேலும் தெரிவித்தார். 

வீதிகளில் குப்பைகளை வீசிச்சென்ற  நபர்களின், குப்பைகளினுள் கண்டுபிடிக்கப்பட்ட மின்சார, குடிநீர் மற்றும் தொலைபேசிக் கட்டணப்பட்டியல்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வீதிகளில் குப்பைகளைக் குவித்து, போக்குவரத்துக்கு  இடையூறுகளை ஏற்படுத்திய விஷமிகளை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

வீதியை சீர்செய்யும் நடவடிக்கையின்போது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டு, அவர்களது ஒத்துழைப்பு பெறப்பட்டிருந்ததுடன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

(கல்முனை விசேட நிருபர்) 

Thu, 01/21/2021 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை