வெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் எமது விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படும்

இந்த நாட்டில் பயிரிடக்கூடியவற்றை பயிரிடுவதன் மூலம் வெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் நமது விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

விவசாயத் துறையை முன்னேற்றுவதற்காக விவசாய சமூகத்திற்கு தேவையான நீர், உரம், தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கும் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.

இதற்காக 2021 வரவு-செலவுத் திட்டத்தில் பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் உள்ளூர் ஒதுக்கீடுகளின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள 800 க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவடையவில்லை. இந்த திட்டங்கள் அனைத்தையும் விரைவாக நிறைவுசெய்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“கிராமத்துடன் கலந்துரையாடல் “திட்டத்தின் கீழ் “பணிகளுடன் மீண்டும் கிராமத்திற்கு “தேசிய நிகழ்ச்சித்திட்டம் பற்றி அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பதற்காக (07) அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்விலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

சுமார் 75% கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான ஒரு நிலையான வேலைத்திட்டத்தின் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பாரம்பரியமாக விவசாய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் காரணமாக தற்போதைய தலைமுறை விவசாயத்திலிருந்து விலகிச் செல்கிறது.

அறுவடைக்கு அதிக விலை, தொழில்நுட்ப அறிவு, நீர் முகாமைத்துவம், உள்ளூர் விதை உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குதல் மற்றும் சேதன விவசாய உற்பத்தியில் ஈடுபட விவசாயிகளை ஊக்குவித்தல் போன்ற முறைகள் மூலம் அதிகாரிகள் பிரச்சினையை தீர்ப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கிராமப்புற பிரச்சினைகளை சட்ட திட்டங்களின் அடிப்படையிலன்றி, மக்களை கவனத்திற்கொண்டு தீர்க்க நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும், எனவே, அலுவலகங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது கிராமங்களுக்குச் சென்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, பணியாற்றுவது அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 01/08/2021 - 13:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை