தொழிலாளருக்கோ கம்பனிகளுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழிலாளர்களுக்கோ, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நிதானமாகவே தீர்மானங்கள் எடுக்கப்படுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் அமைச்சின் கீழ் வரும் கடை, அலுவலக ஊழியர், பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல், குறைந்தபட்ச வேதனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளித்துள்ளது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பாக சில விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். பெருந்தோட்டத் துறைகளில் தொழிற்சங்க தலைவர்கள் எப்போதும் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே சம்பள விடயம் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலைமைக்குள் 1,000 ரூபாவை கொடு என்றதும் அதனை செய்துவிட முடியாது. அரசாங்கம் என்ற வகையில் இந்த விடத்தில் தங்க முட்டை போடும் கோழிகளை கொன்று சாப்பிட முடியாது. இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டும்.

இதனாலேயே ஒரேடியாக அடிப்படை சம்பளத்தை உயர்த்திவிட முடியாது. ஆகவே அறிவுபூர்வமாக கலந்துரையாடி தீர்வு காணப்பட வேண்டும். இது தொடர்பாக நேற்று ( நேற்று முன்தினம்) இறுதி தீர்மானம் எடுக்கப்படவிருந்தது. ஆனால் கொரோனா நிலைமையால் சில தொழிற்சங்க தலைவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த தினத்தில் அதனை நடத்த முடியாதுள்ளது.

எவ்வாறாயினும் 07 ஆம் திகதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதன்போது முடிந்தளவுக்கு தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார்களுக்கு இடையே சுமுகமாக இது தொடர்பாக தீர்வினை கண்டு கூட்டு ஒப்பந்தத்திற்கு வரக் கூடிய தேவையான பின்னணியை உருவாக்குவோம். இதில் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை கைகளில் கிடைக்கச் செய்ய வேண்டிய முறைமை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்தாக உள்ளது.

ஆகவே இந்த விடயத்தில் அவசரப்படத் தேவையில்லை. இவ்வளவு காலம் இருந்துவிட்டோம் இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம். தொழிற்துறையை அழித்து சம்பள அதிகரிப்பை வழங்கிவிட முடியாது.

எவ்வாறாயினும் அந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்கவே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்று தெரிவித்தார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 01/06/2021 - 08:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை