மேல் மாகாண பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்   

மேல் மாகாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மட்டும் இன்று முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.

எனினும், கல்விப்பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களை இலக்கு வைத்து மாத்திரம் இன்று முதல் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி மேல் மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் இன்று முதல் 907 பாடசாலை மாத்திரம் 11ம் தர மாணவர்களுக்காக திறக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மார்ச் மாதம் 01ம் திகதியிலிருந்து 11ம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக மேல் மாகாணத்தில் 79,000 மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும் அவர்கள் தவறவிட்ட கற்றல் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்காக இம் முடிவை எடுத்ததாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் கல்வியமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதாகவும் அதன்படி அனைத்து பாடசாலைகள் தொடர்பிலும் பொதுவான முடிவொன்றை இசுறுபாய மூலம் வெளியிடுவது சாத்தியமற்றது என்பதால் மாவட்ட அபிவிருத்தி குழுவினூடாக முடிவினை எடுப்பதே மிகவும் சரியானது என பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ம் திகதிக்கு முன்னர் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் அங்கத்தவர்கள் மற்றும் பிரதேசத்தின் ஏனைய சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் இவ்விடயம் தொடர்பாக விசேட சந்திப்புகளை நடத்தி அவதானத்துக்கு முகங்கொடுத்து தற்போது ஆரம்பிக்கக்கூடிய பாடசாலைகள் தொடர்பில் முடிவுசெய்து கல்வியமைச்சுக்கு அறிவிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை 1576 ஆகும்.

அவற்றில் 900 பாடசாலைகளை சுகாதார பரிந்துரைகளின்படி திறக்கக் கூடியதாக உள்ளதெனவும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி அளவில் காணப்படும் நிலைமைக்கு ஏற்றவாறு சுகாதார அதிகாரிகள் பெற்றுக்கொடுக்கும் ஆலோசனைகளை அடிப்படையாகக்கொண்டு சரியான நடைமுறையின் கீழ் மேல் மாகாண பாடசாலைகளில் ஏனைய வகுப்பு மாணவர்களுக்காகவும் படிப்படியாக பாடசாலைகளை திறக்க முடியுமென கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Mon, 01/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை