மன உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் புதிய வருடத்தினை வரவேற்போம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வாழ்த்து

புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, 2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம். சுபீட்சத்தை நோக்கிய பயணம் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்பாராத விதமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் நோய்த்தொற்றினை வெற்றிகொள்ள முழு உலகுடனும் இணைந்து நாமும் முன்னிலை வகித்துள்ளோம். கடுமையான சவால்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலும், தேசிய அபிலாஷைகளின் அடிப்படையில் நிலையான அபிவிருத்திக்கு அடித்தளம் அமைக்க எமக்கு முடிந்தது.

மக்களின் எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புதிய ஆண்டில் மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது. மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி மற்றும் தேசிய தனித்துவத்தைப் பாதுகாக்கும் எதிர்பார்ப்புடனேயே புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. நாட்டுக்கும் மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் செயற்படாது என்ற அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வீண்போக நாம் இடமளிக்கமாட்டோம்.

'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இலக்குக்கு அமைய அபிவிருத்தி திட்டங்களை சாத்தியப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான பணியாகும். இதற்காக அரச சேவையும் தனியார் துறை நிறுவனங்களும் இணைந்து செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும். அனைத்து அரச ஊழியர்களும் தமக்கு வழங்கப்படும் பணிகளை மிகச் சரியாக நிறைவேற்றுவார்களேயானால் எந்தவொரு தடையையும் வெற்றிகொள்வது அரசாங்கத்திற்கு கடினமானதல்ல. அந்த அர்ப்பணிப்பை அனைத்து அரச ஊழியர்களிடமும் நான் எதிர்பார்க்கின்றேன். அதேபோன்று அனைத்து பிரஜைகளும் தமது தாய்நாடு குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றேன்.

பிறக்கும் புத்தாண்டில் எத்தகைய தடைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தாலும் அவற்றை வெற்றிகொள்வதற்கான ஆத்ம பலமும் தைரியமும் எம்மிடமுள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதற்கு தேவையான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக நாட்டில் அந்த நம்பிக்கையை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். ஒழுக்கப்பண்பாடான நாட்டில் பொருளாதார மற்றும் சமூக செழிப்பு பற்றி புதிதாக குறிப்பிட வேண்டியதில்லை. எனவே, நாம் அனைவரும் ஒழுக்கப் பண்பாட்டுடன் எமது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு இந்த ஆண்டிலும் உறுதிகொள்வோம்.

மலரும் புத்தாண்டு எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் நோய்நொடிகள் இல்லாத வளமானதொரு எதிர்காலத்தை கொண்டு வர எனது மனமார்ந்த பிரார்த்தனைகள் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

Fri, 01/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை