அம்பாறையில் பசுமைப் புரட்சி; ஒரு மில்லியன் மர நடுகைத் திட்டம்

- பாராளுமன்ற உறுப்பினர் முஸர்ரபினால் முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம்.எம்.முஸர்ரபினால் முன்னெடுக்கப்படவுள்ள மரங்களை வளர்க்கும் மனங்களை வளர்ப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஒரு மில்லியன் மரங்களை நடும் வேலைத்திட்டம்  நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

எதிர்வரும் ஐந்து வருடத்திற்குள் ஒரு மில்லியன் மரங்களை அம்பாறை  மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் நடுவதற்கான நோக்கோடு இவ்வேலைத் திட்டம்  பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்த, பௌத்த, இஸ்லாமிய சமயத் தலைவர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வினை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம்.எம்.முஸர்ரப் ஆரம்பித்து வைத்தார். 

பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த குமாரசிறி திஸாநாயக்க , பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், மரங்களை நட்டுவைத்தனர். 

அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, இறக்காமம், திருக்கோவில், நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, மருதமுனை, பாணம, அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் இவ்வேலைத் திட்டம் தொடர்ந்தும் முன்னடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

வீடுகள், பொது இடங்கள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மத ஸ்தாபனங்கள், வயல் காணிகள் உள்ளிட்ட சகல இடங்களிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன. 

பாராளுமன்ற உறுப்பினர் முஸர்ரபின் சேவைகளைப் பாராட்டி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி.பதூர்தீன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

(அட்டாளைச்சேனை விசேட நிருபர்) 

Tue, 01/19/2021 - 14:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை