முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அக்கறை

ஜனாஸா எரிப்பு நீதிமன்ற வழக்கு குறித்தும் முஸ்தபா விளக்கம்

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் தங்களது சமூகத்தின் பிரச்சினைகளை பேசுகின்றனர். அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர்களது பிரதேசங்களது அபிவிருத்திகளும் இடம்பெற்று வருகின்றன. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சமூகம் சார்ந்த விடயங்களில் அரசியல் வித்தியாசம் இன்றி கலந்தாலோசித்து ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர் என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஜனாஸா தகனம் செய்வது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:-

இலங்கையில் கொவிட்-19  காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா அம்மக்களின் எதிர்ப்புக்களின் மத்தியில் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் உயர்நீதிமன்றம் ஊடாக உரிமைகளை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் ஓர் அங்கமாகவே 20 நாட்களேயான சிசுவின் ஜனாஸா பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட விடயத்தை நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளேன்.

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பல்வேறு கட்சிகளாக பிரிந்து நின்று தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவே செயல்பட்டு வருகின்றனர். அண்மையில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 20ஆவது அரசியல் அமைப்பு வாக்கெடுப்பின்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களின் உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்பட்டு அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அவர்களது உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒரணியாக ஜனாஸா விடயத்தை முன்வைத்தாவது அரசாங்கத்திற்கு வாக்களித்திருக்க முடியும்.

எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாகச் சென்று அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளை பேசிவிட்டு 20 ஆவது அரசியல் திருத்தத்திற்கு வாக்களித்ததுள்ளனா்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத் தரப்பில் இருந்தாலோ அல்லது எதிர்த்தரப்பில் இருந்தாலோ முஸ்லிம்களின் உரிமைகள் என்று வரும்போது ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றார்.

அஷ்ரப் ஏ சமத்

 

Fri, 01/29/2021 - 06:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை