அம்பாறையில் இடியுடன் கனமழை தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில்

வயல் நிலங்களுக்கு பெரும் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் நேற்று (3) இடிமுழக்கத்துடன் கனமழை பொழிந்தது. அதனால் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. வயல் நிலங்கள் மீண்டும் வெள்ளத்துள் மூழ்கியுள்ளது.

காரைதீவு சித்தானைக்குட்டிபுர கிராமம் நீரில் மூழ்கியுள்ளது. நேற்று பெய்த கனமழையையடுத்து ஏற்பட்ட வெள்ளம் இக் கிராமத்துள் புகுந்துள்ளது. இதனால் கிராமத்திற்குச் செல்லும் வீதி தொடக்கம் வீடு வாசல்களெல்லாம் வெள்ளத்தால் நிறைந்துள்ளது. மக்கள் மிகுந்த அசௌகரியத்திற்கு மத்தியில் இடம்பெயரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர்.

இக்கிராமத்தில் சுமார் 50 குடும்பங்களில் 17 குடும்பங்களே தற்சமயம் நிலைகொண்டுள்ளன. அவர்களும் இடம்பெயரவுள்ளனர். சிலர் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான காணியில் 2006 ஆண்டளவில் இச் சித்தானைக்குட்டி கிராமம் உதயமானது.

இவ்விடத்தில் வீடமைப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என வருகின்ற அரசியல்வாதிகள் எல்லோரும் கூறிச்சென்றனரே தவிர யாரும் அதனை இதுவரை நிறைவேற்றவில்லை.சம்பந்தப்பட்டோர் இவ் ஏழை மக்களைக் கவனிப்பார்களா?

காரைதீவு குறூப் நிருபர்

Mon, 01/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை