வூஹானில் சர்வதேச நிபுணர் குழுவின் விசாரணை ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றி கண்டறிவதற்காக சீனாவின் வூஹான் நகருக்கு சென்றிருக்கும் உலக சுகாதார அமைப்பின் விசாரணைக் குழு தமது தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்து கள விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த விஞ்ஞானிகள் நோய்த்தொற்று ஆரம்பித்த கடல் உணவுச் சந்தை, ஆய்வு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மக்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

சீன அதிகாரிகள் வழங்கிய ஆதாரங்கள் அடிப்படையில் இவர்கள் ஆய்வினை மேற்கொள்ளவுள்ளனர். உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனாவுக்கு இடையே பல மாதங்கள் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின்னரே இந்த விசாரணை ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் நெதர்லாந்து நுண்ணுயிரியல் நிபுணரான மரியோன் கூப்மன்ஸ் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'உலகின் கவனம் இதன் பக்கம் ஈர்த்திருப்பதோடு உலகின் கருத்துகளும் இதன் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விசாரணைக்கு பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

13 பேர் கொண்ட இந்த நிபுணர் குழு கடந்த ஜனவரி 14 ஆம் திகதியே வூஹான் நகரை சென்றடைந்தது. இவர்கள் நேற்று தமது இரண்டு வார தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்தனர். இந்த தனிமைப்படுத்தல் காலத்தில் இவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் சீன விஞ்ஞானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2019 கடைசி பகுதியில் வூஹான் நகரிலேயே கொவிட்–19 தொற்று முதல் முறை அடையாளம் காணப்பட்டது. எனினும் இந்த வைரஸ் எங்கு தோன்றியது என்பதை கூறுவதை சீனா பல மாதங்களாக தவிர்த்து வந்தது.

இந்த நிபுணர்கள் குழுவின் பயணத்தை உலகம் அவதானத்துடன் பார்த்திருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் உலகப் பெருந்தொற்று மற்றும் நடவடிக்கை பிரிவின் தலைவரான பேராசிரியர் டேல் பிசர் முன்னதாக கூறி இருந்தார்.

'இது அரசியலோ அல்லது குற்றச்சாட்டுகளை சுமத்துவதோ அல்ல. விஞ்ஞான ரீதியான கேள்வியின் விடையை காண்பதாக உள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வைரஸின் தோற்றம் இயற்கையானது என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் நம்புவதாகவும் பேராசிரியர் பிசர் தெரிவித்தார்.

குறித்த கடல் உணவுச் சந்தையில் இறைச்சிக்காக விற்கப்படும் விலங்குகளில் இருந்து இந்த வைரஸ் மனிதனுக்கு பரவி இருக்கலாம் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது. எனினும் அந்த நிலைப்பாட்டில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

Fri, 01/29/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை